தேசிய அரசியலில் களம் இறங்கிய மம்தா; இனிமேல் காங். - திரிணாமுல் மோதல் இல்லை: மேற்குவங்க காங்கிரஸ் துணை தலைவர் தகவல்

தினகரன்  தினகரன்
தேசிய அரசியலில் களம் இறங்கிய மம்தா; இனிமேல் காங்.  திரிணாமுல் மோதல் இல்லை: மேற்குவங்க காங்கிரஸ் துணை தலைவர் தகவல்

கொல்கத்தா: தேசிய தலைமையின் முடிவால் மேற்குவங்கத்தில் இனிமேல் காங்கிரஸ் - திரிணாமுல் கட்சிகளுக்கு இடையே மோதல் இருக்காது என்றும், நட்புடன் செயல்பட உள்ளதாக அக்கட்சியின் துணை தலைவர் தெரிவித்தார். மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, அடுத்த வாரம் 3 நாள் பயணமாக டெல்லி செல்கிறார். அவர், ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சி தலைவர்களை சந்திக்கிறார். இந்த நிலையில், மேற்குவங்க மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் டிப்திமன் கோஷ் அளித்த பேட்டியில், ‘மேற்குவங்கத்தில் காங்கிரசுக்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான நட்பை மேலும் அதிகப்படுத்துவோம். அக்கட்சியுடனான மோதல் போக்கை குறைக்க முயற்சிப்போம். தேசிய அளவில் பாஜகவை வீழ்த்த வேறு சில எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து, இரு கட்சிகளின் தலைமையும் ஒருங்கிணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன. இருந்தாலும், திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், காங்கிரஸ் தொடர்ந்து விமர்சிக்கும்’ என்றார்.  திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கட்சித் தலைவராக மேற்குவங்க முதல்வரான மம்தா பானர்ஜியை, அக்கட்சி எம்பிக்கள் ஏகமனதாக தேர்வு செய்துள்ளனர். வரும் 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, மற்ற எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில், மம்தா பானர்ஜி தேசிய அரசியலில் நேரடியாக களம் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.இவர், 2011ம் ஆண்டில் முதல்வராக பதவி வகிப்பதற்கு முன் ஏழு முறை எம்பியாக இருந்துள்ளார். மம்தா பானர்ஜி நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத நிலையில், அவர் தற்போது நாடாளுமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருப்பது தேசிய அரசியலில் முக்கியத்துவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல், அவர் சட்டமன்ற உறுப்பினராக இல்லாத நிலையில், முதல்வராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை