என்ன வேம்புலி, ஒரு சின்ன ஊசிக்கு இவ்வளவு பயமா ?

தினமலர்  தினமலர்
என்ன வேம்புலி, ஒரு சின்ன ஊசிக்கு இவ்வளவு பயமா ?

கொரோனா வந்த பிறகு அதைக் கட்டுப்படுத்த இந்த வருடத்தின் துவக்கத்திலிருந்தே தடுப்பூசிகளை மக்கள் போட்டுக் கொள்ள வேண்டுமென மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இரண்டாவது அலை வந்த பிறகு தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ள மக்கள் மிக ஆர்வத்துடன் முன் வந்தனர்.

பல சினிமா பிரபலங்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டு மக்களும் தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற நல்லெண்ண பிரச்சாரத்தையும் செய்தார்கள். தடுப்பூசி போட்டுக் கொண்ட போது அவர்கள் எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்கள்.

குறிப்பாக நடிகைகள் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் போது ஊசி செலுத்துவதைப் பார்க்காமல் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டும், கண்ணை இறுக மூடிக் கொண்டும், இருந்தார்கள். ஊசி என்றாலே சிலருக்கு சிறு வயதிலிருந்தே பயமாக இருக்கும்.

அப்படி ஒரு பயம் 'சார்பட்டா பரம்பரை' படத்தில் மெயின் வில்லனாக வலிமையான குத்துச் சண்டை வீரராக நடித்த ஜான் கொக்கேனுக்கும் இருக்கிறது. இதற்கு முன் சில தமிழ்ப் படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படம் தான் இவரை மக்களுக்கு அடையாளம் காட்டியிருக்கிறது.

ஜான் கொக்கேன் மனைவி பூஜா ராமச்சந்திரன், முன்னாள் விஜே, சில படங்களிலும் நடித்துள்ளார். அவர் தானும் தனது கணவர் ஜானும் தடுப்பூசி போட்டுக் கொண்ட போது எடுத்த வீடியோ இன்ஸ்டாகிராமில் இருக்கிறது. ஊசி போடும் போது அவர் அந்த அளவிற்கு பயந்திருக்கிறார். தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதும், நர்சிடம் கொஞ்சம் இருங்கள் என கை காட்டுவதும் என ஊசி குத்துவதற்குப் பயந்து கண்ணை இறுக மூடிக் கொண்டு வேறு பக்கம் திரும்பிவிடுகிறார். இந்த வீடியோவை ஒரு சுவாரசியத்திற்காகத்தான் பூஜா பகிர்ந்திருக்கிறார்.

ஜான் கொக்கேன் பற்றிய ஒரு பர்சனல் தகவல். இயக்குனர் வெங்கட் பிரபு நாயகனாக நடிக்க, சமுத்திரக்கனி இயக்கிய 'உன்னைச் சரணடைந்தேன்' படத்தின் கதாநாயகியான மீரா வாசுதேவன் தான் ஜான் கொக்கேனின் முதல் மனைவி. மீராவிற்கு ஜான் இரண்டாவது கணவர். இருவரும் நான்கு வருடங்கள் மட்டுமே இணைந்து வாழ்ந்திருக்கிறார்கள்.

பூஜா ராமச்சந்திரனுக்கும் ஜான் இரண்டாவது கணவர் தான். பூஜா முதலில் அவர் வேலை பார்த்த டிவியில் விஜேவாக இருந்த கிரெய்க் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு ஏழு வருடங்கள் வாழ்ந்து பின்னர் பிரிந்துவிட்டார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஜானும், பூஜாவும் திருமணம் செய்து கொண்டனர்.

மூலக்கதை