உலகிலேயே அதிக இறக்குமதி வரி வசூலிக்கும் நாடு இந்தியா என எலான் மஸ்க் வேதனை : மின்சார வாகனங்களுக்கு வரியை குறைக்கவும் வேண்டுகோள்!!

தினகரன்  தினகரன்
உலகிலேயே அதிக இறக்குமதி வரி வசூலிக்கும் நாடு இந்தியா என எலான் மஸ்க் வேதனை : மின்சார வாகனங்களுக்கு வரியை குறைக்கவும் வேண்டுகோள்!!

டெல்லி : இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டிய நிலையில், டீசல் விலை ரூ.100ஐ நெருங்கி வருகிறது. இதனால் அதிக விலை கொடுத்து வாங்கிய கார்கள், இரு சக்கர வாகனங்களை ஓட்டுவது கசக்கத் தொடங்கி விட்டது. இந்தியாவில் பொருளாதார நெருக்கடியால் பலர் வேலை இழந்துவிட்ட நிலையில், வாங்கிய வாகனங்கள் பெட்ரோல் டீசல் இன்றி மூளையில் சாய்ந்து கிடக்கின்றன. ஒன்றிய அரசை மறைமுறைகமாக விமர்சிக்கும் வகையில் பிரபலங்கள் பலர் சைக்கிளுக்கு மாறிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றன. சைக்கிளை போல் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கவும் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் அதன் விலையோ விண்ணை முட்டும் அளவிற்கு உள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு விதிக்கப்படும் அதிகபட்ச வரி விதிப்பு என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான், உலகின் பிரபல எலெக்ட்ரிக் கார் நிறுவனமான டெஸ்லாவை இந்தியாவில் விரைவாக அறிமுகம் செய்யுமாறு ட்விட்டரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த யூ- டியூபர் ஒருவர் பதிவிட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், உலகில் உள்ள பெரிய நாடுகளிலேயே மிக அதிகமாக இறக்குமதி வரி வசூலிக்கும் நாடு இந்தியா என விமர்சித்துள்ளார். எலெக்ட்ரிக் வாகனங்களை பெட்ரோல் டீசல் வாகனங்களை போல் இந்தியா கையாள்வதால் டெஸ்லாவை கொண்டு வருவதில் சிக்கல் இருப்பதாக எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்தியாவின் காலநிலை இலக்குகளுடன் ஒத்துப் போவதில் டெஸ்லா நிறுவனத்திற்கு சிக்கல் இருப்பதாக கூறியுள்ளார். குறைந்தபட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களுக்காவது இறக்குமதி வரியை இந்தியா குறைக்க முன்வர வேண்டும் என எலான் மஸ்க் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதனிடையே எலெக்ரிக் கார்களுக்கான இறக்குமதி வரியை குறைக்குமாறு டெஸ்லா நிறுவனம் இந்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை