கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை ஆறுதல் வெற்றி; 50 ரன் குறைவாக எடுத்துவிட்டோம்: இந்திய கேப்டன் தவான் பேட்டி

தினகரன்  தினகரன்
கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை ஆறுதல் வெற்றி; 50 ரன் குறைவாக எடுத்துவிட்டோம்: இந்திய கேப்டன் தவான் பேட்டி

கொழும்பு: இந்தியா-இலங்கை அணிகள் இடையே 3வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் சஞ்சு சாம்சன், நிதிஷ்ராணா, சேத்தன் சக்காரியா, கிருஷ்ணப்பா கவுதம், ராகுல் சாகர் ஆகியோர் அறிமுக வீரர்களாக இடம் பிடித்தனர். அதிரடியாக தொடங்கிய தவான் 13 ரன்னில் ஆட்டம் இழந்தார். பிரித்வி ஷா 49 ரன்னிலும் சஞ்சு சாம்சன் 46 ரன்னிலும் வெளியேறினர். இடையில் மழையால் ஒருமணி நேரம் பாதிக்கப்பட்ட நிலையில் 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது. பின்னர் ஆட்டம் தொடங்கியது. மணிஷ்பாண்டே 19, சூர்யகுமார் யாதவ் 40, நிதிஷ் ராணா 7, சைனி 15, ராகுல் சாகர் 13 ரன்னில் ஆட்டம் இழந்தனர். 43.1 ஓவரில் இந்தியா 225 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இலங்கை அணியில், அகிலா தனஞ்ஜெயா, பிரவீன் ஜெயவிக்ரமா தலா 3 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் களம் இறங்கிய இலங்கை அணி 39 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 227 ரன் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக தொடக்க வீரர் அவிஷ்கா பெர்னாண்டோ 76, பானுகா ராஜபக்சே 65 ரன் எடுத்தனர். அவிஷ்கா ஆட்டநாயகன் விருதும், சூர்யகுமார் யாதவ் தொடர் நாயகன் விருதும் பெற்றனர். முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்தியா 2-1 என தொடரை கைப்பற்றியது. போட்டி முடிந்தபின் தவான் கூறுகையில், நாங்கள் நன்றாக தொடங்கினாலும் மழைக்கு பின் விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். 50 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம் என நினைக்கிறேன். எல்லோரும் நீண்ட காலமாக தனிமைப்படுத்தலில் இருப்பதால் அவர்கள் அறிமுகமானதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், என்றார். இலங்கை கேப்டன் தசுன் ஷனகா கூறுகையில், தொடரை வென்ற இந்தியாவுக்கு வாழ்த்துக்கள். இன்று இளம்வீரர்கள் பேட்டிங், பந்துவீச்சில் முதிர்ச்சியை காட்டினர். அவர்களிடம் இருந்து நான் எதிர்பார்த்தது இதுதான். இந்த வெற்றிக்காக தான் ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்திருந்தனர், என்றார். அடுத்ததாக இரு அணிகளும் 3 டி.20 போட்டிகளில் மோதுகின்றன. இதில் முதல் போட்டி நாளை நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு போட்டி தொடங்கும்.

மூலக்கதை