கொரோனா பரவலால் மூடப்பட்டிருந்த பொது நூலகங்கள் இன்று முதல் இயங்க அனுமதி: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொரோனா பரவலால் மூடப்பட்டிருந்த பொது நூலகங்கள் இன்று முதல் இயங்க அனுமதி: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை: தமிழகம் முழுவதும் பொது நூலகங்களை இன்று முதல் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பொது நூலக இயக்குனர் வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் மாநிலம் முழுவதும் உள்ள 4600க்கும் மேற்பட்ட நூலகங்கள் மூடப்பட்டன. தற்போது பள்ளி, கல்லூரிகள், தியேட்டர் தவிர அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், கொரோனா பரவல் குறைந்து வருவதன் காரணமாக தமிழகத்தில் செயல்படும் அனைத்து நூலகங்களையும் திறக்கக் கோரி பல்வேறு விண்ணப்பங்கள் மற்றும் கோரிக்கை மனுக்கள் பொது நூலக இயக்குனருக்கு அனுப்பப்பட்டு வந்தது.

இந்தநிலையில், போட்டித் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் மற்றும் வாசகர்களின் நலன்களை கருத்தில்கொண்டு தமிழகத்தில் நோய் தொற்று படிப்படியாக குறைந்துவரும் நிலையில், பொதுநூலகத் துறையின் கீழ் செயல்படும் நூலகங்களை கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் செயல்படும் நூலங்களைத் தவிர்த்து மற்ற நூலங்களை இன்று முதல் திறக்க அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கு பொது நூலக இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள்: தினந்தோறும் நூலங்களை மூடுவதற்கு முன்பு வாசகர்கள் பயன்படுத்திய இருக்கைகள், மேசைகள், நாற்காலிகள், நூல்கள் மற்றும் தொடர்புடைய இடங்களை கிருமி நாசினி கொண்டு முழுமையாக தூய்மைப்படுத்த வேண்டும். அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் முறையாக கடைபிடிக்க வேண்டும்.



கட்டுப்பாட்டு மண்டலங்களில் இருந்து வரும் வாசகர்களை நூலகத்தை பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது. 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், பல்வேறு நோய்வாய்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் 15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை நூலகத்தை பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது.

நூலகத்திற்கு வரும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். நூலகத்தின் நுழைவு வாயிலில் சோப் அல்லது கிருமி நாசினி வைத்திருக்க வேண்டும்.

வெப்ப அளவீட்டு சோதனை செய்ய வேண்டும். 6 அடி இடைவெளியியுடன் தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும்.

நூலகங்கள் அல்லது பிரிவுகளில் குளிர்சாதன வசதியை தவிர்க்க வேண்டும்.

நூல்கள் வழங்கும் பிரிவில் வாசகர்களின் பார்வைக்கு வைக்கப்படும் நூல்களை தினமும் மாற்ற வேண்டும்.

இந்த நடைமுறைகளை மிகுந்த கவனத்துடன் பின்பற்றி நூலகங்களை செயல்படுத்துவது சம்பந்தப்பட்ட தலைமை நூலகரது பொறுப்பாகும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


.

மூலக்கதை