அவதூறு பேச்சு வழக்கில் தேடப்பட்ட பங்குத்தந்தை ஜார்ஜ் பொன்னையா கைது

தமிழ் முரசு  தமிழ் முரசு
அவதூறு பேச்சு வழக்கில் தேடப்பட்ட பங்குத்தந்தை ஜார்ஜ் பொன்னையா கைது

மதுரை: குமரி மாவட்டம் அருமனை வட்டார கிறிஸ்தவ இயக்கம் சார்பில் கடந்த 18ம்தேதி பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பேசிய ஜனநாயக கிறிஸ்தவ பேரவையின் தலைவரும், குழித்துறை மறை மாவட்ட பனவிளை பங்கு தந்தையுமான ஜார்ஜ் பொன்னையா பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையானது.

இந்து மதத்தை இழிவுப்படுத்தும் வகையில் பேசியதுடன், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாகர்கோவில் பா. ஜ. சட்டமன்ற உறுப்பினர் எம். ஆர். காந்தி ஆகியோரையும் அவமதிப்பாக பேசியதாக பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பா. ஜ. வினர் அருமனை போலீசில் புகார் அளித்தனர்.



இந்த நிலையில் ஜார்ஜ் பொன்னையா, அருமனை வட்டார கிறிஸ்தவ இயக்க செயலாளர் ஸ்டீபன் உள்ளிட்டோர் மீது அவதூறாக பேசுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் அருமனை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஜார்ஜ் பொன்னையாவை கைது செய்ய 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த பிரச்னை தொடர்பாக ஜார்ஜ் பொன்னையா வெளியிட்ட வீடியோ பதிவில், அருமனையில் நடந்த கூட்டத்தில் நான் பேசிய பேச்சுகள் எடிட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

எனது உரையை திரித்து கூறி உள்ளனர். நானோ, என்னுடன் மேடையில் பேசியவர்களோ எந்த மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக பேச வில்லை.



ஒரு வேளை என்னுடைய பேச்சு மற்றும் பலருடைய பேச்சுகள் அவ்வாறு இந்து சகோதர, சகோதரிகளின் உணர்வுகளை புண்படுத்தி இருந்தால், அதற்கு என்னுடைய வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்காலங்களில் இப்படிப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்த மாட்டோம் என்பதையும் நான் நேசிக்கும் இந்து சகோதர, சகோதரிகளுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என கூறி இருந்தார். இதற்கிடையே நெல்ைல சரக டி. ஐ. ஜி.

பிரவீன்குமார் அபினபு நேற்று மாலை குமரி மாவட்டம் வந்தார். அதிரடிப்படையினருடன் மார்த்தாண்டம் காவல் நிலையம் சென்ற அவர், போலீஸ் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.



இந்நிலையில், மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து காரில் பங்குதந்தை ஜார்ஜ் பொன்னையா மதுரை நோக்கி வருவதாக மாவட்ட எஸ்பி பாஸ்கரனுக்கு தகவல் கிடைத்தது. எஸ்பி உத்தரவின் பேரில் போலீசார் மாவட்டம் முழுவதும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

ஒத்தக்கடையில் அவரது காரை, ஒத்தக்கடை இன்ஸ்பெக்டர் ஆனந்ததாண்டவன் தலைமையிலான போலீசார் வழிமறித்தனர். கார் நிற்காமல் சென்றது.

இதுகுறித்து சிலைமான் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சிலைமான் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் மதுரை ரிங் ரோட்டில் காத்திருந்தனர்.



அப்போது அவ்வழியாக வந்த காரை மடக்கி பங்குத்தந்தை ஜார்ஜ் பொன்னையாவை கைது செய்தனர். பின் அவரை விசாரணைக்காக கள்ளிக்குடி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று திருமங்கலம் டிஎஸ்பி வினோதினியிடம் ஒப்படைத்தனர். இதைதொடர்ந்து கோவில்பட்டி டிஎஸ்பி உதயசூரியன் தலைமையிலான போலீசார் அவரை விசாரணைக்காக கன்னியாகுமரி அழைத்து சென்றனர்.

பாஜக ஆர்ப்பாட்டம்
ஜனநாயக கிறிஸ்தவ பேரவையின் தலைவர் ஜார்ஜ் பொன்னையா கைதை தொடர்ந்து, அவருக்கு பின்னால் யார் இருக்கிறார்கள்? என்பதை கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக பாஜக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சென்னையில் கலெக்டர் அலுவலகம், புதுவண்ணாரப்பேட்டை டோல்கேட் அருகில்,  வில்லிவாக்கம் பேருந்து நிலையம் முன்பு என 3 இடத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.


.

மூலக்கதை