டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் முதல் பதக்கம் :மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றார்…

தினகரன்  தினகரன்
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் முதல் பதக்கம் :மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றார்…

டோக்கியோ : ஜப்பான் தலைநகர் டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. மகளிர் பளுதூக்குதல் 49 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். மணிப்பூர் தலைநகர் இம்பாலைச் சேர்ந்த 26 வயதான மீராபாய் சானு, நடப்பு ஒலிம்பிக் தொடரில் ஒட்டு மொத்தமாக 202 கிலோ எடையை தூக்கி 2ம் இடத்தை பிடித்தார். ஸ்நேச்சில் 87 கிலோவும், க்ளீன் அண்ட் ஜெர்க்கில் 115 கிலோ எடையையும் தூக்கி மீராபாய் அசத்தியுள்ளார். க்ளீன் அண்ட் ஜெர்க் போட்டியில் முதல் அட்டம்டெட்டில் 110 கிலோ, இரண்டாவது அட்டம்டெட்டில் 115 கிலோ எடையைச் சரியாகத்தூக்கியவர், மூன்றாவது அட்டம்டெட்டில் 117கிலோ எடையைத் தூக்க சிரமப்பட்டார். இதனால் தங்கம் வென்றிருக்கவேண்டியவரால் வெள்ளியே வெல்லமுடிந்தது.இதே பிரிவில் சீன வீராங்கனை 210 கிலோ எடையை தூக்கி தங்கப்பதக்கம் வென்றார்.அமெரிக்காவின் ஜோர்டன் டெலாக்ரூஸ் வெண்கல பதக்கம் வென்றார்.மீராபாய் வெற்றி மூலம் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் பதக்கப் பட்டியலில் இந்தியா இடம் பிடித்தது. ஒலிம்பிக் வரலாற்றில் பளுதூக்குதல் போட்டியில் இந்தியா இதுவரை 2 பதக்கங்களை வென்றுள்ளது. கர்ணம் மல்லேஸ்வரி 2000 சிட்னி ஒலிம்பிக் தொடரில் வெண்கலம் வென்ற நிலையில் மீராபாய் நடப்பு தொடரில் வெள்ளி வென்றுள்ளார்.இதனிடையே மீராபாய் சானுவின் வெற்றி ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிக்கும் என்றும் மீராபாய் வெற்றியால் நாடே பெருமிதம் கொள்கிறது என்றும் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

மூலக்கதை