ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்: வெள்ளி வென்றார் மீராபாய் சானு

தினமலர்  தினமலர்
ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்: வெள்ளி வென்றார் மீராபாய் சானு

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. பளுதுாக்குதலில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு (49 கி.கி.,) வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.

ஜப்பானில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இதில் பெண்களுக்கான பளுதுாக்குதல் 49 கி.கி., எடைப்பிரிவில் 'ஸ்னாட்ச்' பிரிவில் 87 கிலோ, 'கிளீன் அன்ட் ஜெர்க்' பிரிவில் 115 கிலோ என, மொத்தம் 202 கிலோ பளுதுாக்கிய இந்தியாவின் மீராபாய் சானு, 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இது, டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் ஆனது. தவிர, ஒலிம்பிக் பளுதுாக்குதலில் இந்தியாவுக்கு கிடைத்த 2வது பதக்கம்.

ஏற்கனவே 2000ம் ஆண்டு சிட்னியில் நடந்த ஒலிம்பிக்கில் இந்திய வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி, வெண்கலம் வென்றிருந்தார்.சீனாவின் ஹோ ஜிஹுய் (210 கிலோ) தங்கப் பதக்கம் வென்றார். இந்தோனேஷியாவின் ஐசா விண்டி கேன்டிகா (194 கிலோ) வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.

பிரதமர் மகிழ்ச்சி

மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்றதற்கு பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவு:மீராபாய் சானுவின் அற்புதமான திறமையால், இந்தியா மகிழ்ச்சி அடைகிறது. அவரது வெற்றி, ஒவ்வொரு இந்தியரையும் ஊக்கப்படுத்துகிறது. இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.


மூலக்கதை