‘ஸ்மார்ட் போன்’ விற்பனை 13 சதவீதம் சரிவு

தினமலர்  தினமலர்
‘ஸ்மார்ட் போன்’ விற்பனை 13 சதவீதம் சரிவு

புதுடில்லி:கொரோனா தொற்று காரணமாக, ‘ஸ்மார்ட்போன்’கள் விற்பனை, கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில், அதற்கு முந்தைய காலாண்டை விட 13 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.

இக்காலகட்டத்தில், மொத்தம் 3.24 கோடி போன்கள் விற்பனைக்கு விடுக்கப்பட்டுள்ளன. இதுவே, கடந்த ஆண்டு இதே காலத்தில், முதல் அலை காரணமாக, விற்பனை கடுமையான சரிவை கண்டிருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது, மதிப்பீட்டு காலத்தில் விற்பனை 87 சதவீதம் அதிகரித்துள்ளது.

சீனாவை சேர்ந்த, ‘சயோமி’ நிறுவனம், ஸ்மார்ட் போன்கள் விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தை பிடித்துள்ளது. இதன் சந்தை பங்களிப்பு 29 சதவீதமாகும். மொத்தம் 95 லட்சம் போன்களை இந்நிறுவனம் விற்பனைக்கு விடுத்துள்ளது.‘சாம்சங்’ நிறுவனம், 17 சதவீத பங்களிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

‘விவோ’ மூன்றாவது இடத்தில் உள்ளது. கொரோனா காரணமாக, பல மாநிலங்களில் தடையுத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் சரிவு ஏற்பட்டு உள்ளது.இரண்டாவது காலாண்டில் நிலைமை சரியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை