அருணாச்சல பிரதேசம் அருகே உள்ள திபெத் எல்லை பகுதிக்கு சீன அதிபர் திடீர் விசிட்

தினகரன்  தினகரன்
அருணாச்சல பிரதேசம் அருகே உள்ள திபெத் எல்லை பகுதிக்கு சீன அதிபர் திடீர் விசிட்

புதுடெல்லி: திபெத் நாட்டுக்கு சீனா உரிமை கோருவது மட்டுமின்றி, அதை தனது கட்டுப்பாட்டிலும் வைத்துள்ளது. இதன் எல்லை அருகே உள்ள அருணாச்சல பிரதேசத்தை தெற்கு திபெத் பகுதி என்றும், அது தங்களுக்கு சொந்தம் என்றும் கூறி வருகிறது.  இந்நிலையில், சீன அதிபர் ஜின்பிங் கடந்த புதன்கிழமை முதல் முறையாக திபெத்தில் உள்ள யிங்ச்சி பகுதிக்கு திடீரென வந்து சென்றுள்ளார். மெயின்லிங் விமான நிலையத்தில் இறங்கிய அவர், நியாங் ஆற்று பகுதிக்கு சென்று பிரம்மபுத்திரா ஆற்றுப் பகுதியை பார்வையிட்டுள்ளார். யிங்ச்சியில் இருந்து திபெத்தின் தலைநகரான லாசா வரையிலான 435.5 கி.மீ மின்சார ரயில் சேவையை சமீபத்தில் சீனா தொடங்கியது. இதனையும் அவர் பார்வையிட்டார்.  ஜின்பிங் கடந்த புதன்கிழமை திபெத் பகுதிக்கு வந்து சென்ற நிலையில், 2 நாட்களுக்கு பிறகு நேற்றுதான் அவரது பயணம் குறித்த தகவல் வெளியிடப்பட்டது. இந்தியாவுக்குள் பாயும் ஆறுகளின் குறுக்கே அணை கட்டி சீனா அடாவடி செய்து வருகிறது. இந்நிலையில், பிரம்மபுத்திரா ஆற்றை அவர் பார்வையிட்டது பல்வேறு ஊகங்களை எழுப்பியுள்ளது.30 ஆண்டுகளில் முதல் முறையாக…அதிபரான பிறகு முதல் முறையாக ஜின்பிங் திபெத் வந்துள்ளார். 1990ம் ஆண்டு அப்போதைய சீன அதிபர் ஜியாங் ஜெமின் திபெத் சென்றார். அதன் பிறகு 30 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதைய அதிபர் ஜின்பிங் திபெத் சென்றுள்ளார். இதற்கு முன்பு 2011ம் ஆண்டு துணை அதிபராக இருந்தபோது அவர் திபெத் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை