டோக்கியோவில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது ஒலிம்பிக்: இந்திய வீரர், வீராங்கனைகள் 125 பேர் பங்கேற்பு

தினகரன்  தினகரன்
டோக்கியோவில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது ஒலிம்பிக்: இந்திய வீரர், வீராங்கனைகள் 125 பேர் பங்கேற்பு

டோக்கியோ: உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டித்  தொடர், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள்  மற்றும் வாணவேடிக்கையுடன் கோலாகலமாகத் தொடங்கியது. இந்த போட்டியில்,  இந்தியா சார்பில் இதுவரை இல்லாத அளவுக்கு 125 வீரர், வீராங்கனைகள் பதக்கம்  வெல்லும் முனைப்புடன் களமிறங்குகின்றனர். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை  நடத்தப்படும் ஒலிம்பிக் போட்டி, கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று  அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல்  நீடிப்பதால், ஜப்பான் மக்கள் இந்த ஆண்டும் ஒலிம்பிக் போட்டியை நடத்த  எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் நிலையில், அந்நாட்டு அரசும் சர்வதேச  ஒலிம்பிக் கூட்டமைப்பும் உறுதியுடன் செயல்பட்டு போட்டியை நடத்துகின்றனர்.மொத்தம்  205 நாடுகளை சேர்ந்த 11,683 வீரர், வீராங்கனைகள் 33 போட்டிகளில் தலா 339  தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களுக்காக திறமையை வெளிப்படுத்த உள்ளனர்.தொடக்க  விழா: விளையாட்டு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த போட்டிக்கான தொடக்க  விழா, தேசிய ஸ்டேடியத்தில் நேற்று வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் மற்றும்  வாணவேடிக்கையுடன் நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. கொரோனா அச்சுறுத்தலால்  ஜப்பான் முழுவதும் அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சிறப்பு  அழைப்பாளர்களாக ஆயிரம் பேர் மட்டுமே இந்த விழாவில் பங்கேற்றனர். வேகமாக,  உயர்வாக, வலுவாக ஒற்றுமையாக ஒருங்கிணைந்து முன்னேறுவோம் என்ற கருத்தின்  அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட தொடக்க விழாவை, ஜப்பான் மன்னர் நாருஹிடோ  முறைப்படி தொடங்கி வைத்தார். வேற்றுமையில் ஒற்றுமை என்ற கருத்தை  பிரதிபலிக்கும் டோக்கியோ ஒலிம்பிக் சின்னம் திறந்து வைக்கப்பட்டது. ஏராளமான  டிரோன்கள் ஸ்டேடியத்தை வட்டமிட்டு உலகப் பந்து மிதப்பதைப் போன்ற தோற்றத்தை  ஏற்படுத்தியது பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியது. அணிவகுப்பு:  போட்டியில் பங்கேற்கும் 205 நாடுகளை சேர்ந்த குழுவினரும் தங்கள் நாடுகளின்  தேசியக் கொடியை ஏந்தி தொடக்க விழா அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.  கொரோனாவால் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வீரர், வீராங்கனைகளே இதில்  பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். இந்தியக் குழுவினர் ஆண்கள் ஹாக்கி அணி  கேப்டன் மன்பிரீத் சிங், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில்  அணிவகுத்து வந்தனர். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் நிர்வாகக் குழு  தலைவர் ஹஷிமோட்டோ சீகோ, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக்  இருவரும் மிகுந்த சிரமத்துக்கிடையே இந்த தொடரை நடத்துவது குறித்தும்,  பெருந்தொற்று காலத்தில் உலக மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட  வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்திப் பேசினர். ஸ்காட்லாந்து பாடகி  சூசன் மெக்தலேன் பாய்ல் தனது புகழ்பெற்ற ‘பறப்பதற்கான சிறகுகள்’ என்ற பாடலை  இசைக்க, ‘லேசர்’ புறாக்கள் அரங்கில் இருந்து சுதந்திரமாகப் பறந்து சென்றது  அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது. அதைத் தொடர்ந்து, 50க்கும் மேற்பட்ட  விளையாட்டு போட்டிகளைக் குறிக்கும் வகையில் நிகழ்த்தப்பட்ட கிராபிக்ஸ்  காட்சிகள் அதிசயிக்க வைத்தன.ஒலிம்பிக் சுடர்: ஒலிம்பிக் கீதம் முழங்க  கொடியேற்றப்பட்ட பின்னர், புகுஷிமாவில் இந்த ஆண்டு மார்ச் 25ம் தேதி  தொடங்கி 2000க்கும் மேற்பட்ட பல துறை பிரபலங்களால் டோக்கியோ நகருக்கு  எடுத்து வரப்பட்ட ஒலிம்பிக் சுடர், பலத்த ஆரவாரத்துக்கிடையே  ஸ்டேடியத்துக்குள் கொண்டுவரப்பட்டது. பள்ளி சிறார்களிடம் ஒப்படைக்கப்பட்ட  சுடரை அவர்கள் அரங்கை சுற்றி வந்து ஜப்பான் டென்னிஸ் நட்சத்திரம் நவோமி  ஒசாகாவிடம் ஒப்படைத்தனர். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் இதுவரை 4 சாம்பியன்  பட்டங்களை வென்ற சாதனையாளரான ஒசாகா, சமீபத்தில் மனச்சோர்வு காரணமாக  செய்தியாளர் சந்திப்பை புறக்கணித்ததுடன் பிரெஞ்ச் ஓபன் தொடரில் இருந்தும்  விலகியது குறிப்பிடத்தக்கது. நிறவெறிக்கு எதிராக தனது கருத்துகளை  தொடர்ந்து துணிச்சலாக வெளிப்படுத்தி வரும் அவருக்கு, ஒலிம்பிக் சுடரை  ஏற்றும் மிகப் பெரிய கவுரவம் வழங்கப்பட்டது மிகப் பொருத்தமானதாக அமைந்தது.  ஒலிம்பிக் போட்டிகள் முறைப்படி தொடங்கியுள்ள நிலையில் வீரர்,  வீராங்கனைகள் பதக்க வேட்டையில் மும்முரமாகக் களமிறங்குகின்றனர். மிகப்  பெரிய கனவுகளுடன் டோக்கியோ சென்றுள்ள 125 பேர் அடங்கிய இந்திய குழுவினர், கணிசமான  எண்ணிக்கையில் பதக்கங்களை வென்று தாய்நாட்டுக்கு பெருமை சேர்க்க  வாழ்த்துவோம். * தொடக்க விழாவில், உலகம் முழுவதும் கொரோனாவால் பலியானோருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.* ஆகஸ்ட் 8ம் தேதி டோக்கியோ ஒலிம்பிக் நிறைவடைகிறது.

மூலக்கதை