‘சின்ன பசங்க’ இந்தியா ஏமாற்றம்: கோப்பை வென்று நிம்மதி | ஜூலை 23, 2021

தினமலர்  தினமலர்
‘சின்ன பசங்க’ இந்தியா ஏமாற்றம்: கோப்பை வென்று நிம்மதி | ஜூலை 23, 2021

கொழும்பு: மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் அஞ்சு வீரர்கள் அறிமுகம் உட்பட 6 பேர் மாற்றம் செய்யப்பட்டனர். அனுபவம் இல்லாத ‘சின்ன பசங்க’ சோபிக்க தவறியதால், இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இருப்பினும் தொடரை 2–1 என வென்று கோப்பை கைப்பற்றியது. 

இலங்கை சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகளில் வென்ற இந்திய அணி 2–0 என, ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. கொழும்புவில் 3வது போட்டி நடந்தது.

 

‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த இந்திய அணிக்கு கேப்டன் ஷிகர் தவான், பிரித்வி ஷா ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. தனஞ்செயா டி சில்வா வீசிய 2வது ஓவரில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி அடித்த தவான் (13) நிலைக்கவில்லை. பின் இணைந்த பிரித்வி ஷா, சஞ்சு சாம்சன் ஜோடி இலங்கை பந்துவீச்சை எளிதாக சமாளித்தது. இரண்டாவது விக்கெட்டுக்கு 74 ரன் சேர்த்த போது ஷனகா பந்தில் பிரித்வி (49) அவுட்டானார். சிறிது நேரம் தாக்குப்பிடித்த சாம்சன் (46), ஜெயவிக்ரமாவிடம் சரணடைந்தார்.

 

மழை குறுக்கீடு: இந்திய அணி 23 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 147 ரன் எடுத்திருந்த போது மழையால் போட்டி சிறிது நேரம் தடைபட்டது. மழை நின்ற பின், தலா 47 ஓவர் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது. மணிஷ் பாண்டே (11), ஹர்திக் பாண்ட்யா (19) நிலைக்கவில்லை. பொறுப்பாக ஆடிய சூர்யகுமார் யாதவ் (40) ஓரளவு கைகொடுத்தார். தனஞ்செயா ‘சுழலில்’ கிருஷ்ணப்பா கவுதம் (2), நிதிஷ் ராணா (7) சிக்கினர். ராகுல் சகார் (13), நவ்தீப் சைனி (15) நிலைக்கவில்லை.

இந்திய அணி 43.1 ஓவரில் 225 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. இலங்கை சார்பில் தனஞ்செயா, ஜெயவிக்ரமா தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

பவுலிங் ஏமாற்றம்: பின் களமிறங்கிய இலங்கை அணிக்கு 47 ஓவரில் 227 ரன் எடுத்தால் வெற்றி என ‘டக்வொர்த் லீவிஸ்’ முறைப்படி இலக்கு மாற்றப்பட்டது. மினோத் பானுகா (7) ஏமாற்றினார். இந்திய பந்துவீச்சை எளிதாக சமாளித்த அவிஷ்கா பெர்ணான்டோ (76), பானுகா ராஜபக்சா (65) அரைசதம் கடந்தனர். தனஞ்செயா டி சில்வா (2), கேப்டன் தசுன் ஷனகா (0), சமிகா கருணாரத்னே (3) சொதப்பினர். அசலங்கா (24) ஆறுதல் தந்தார்.

இலங்கை அணி 39 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 227 ரன் எடுத்து ‘டக்வொர்த் லீவிஸ்’ முறைப்படி ஆறுதல் வெற்றி பெற்றது. மெண்டிஸ் (15), அகிலா தனஞ்செயா (5) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் ராகுல் சகார் 3 விக்கெட் கைப்பற்றினார்.

 

மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன், நிதிஷ் ராணா, ராகுல் சகார், சேட்டன் சக்காரியா, கிருஷ்ணப்பா கவுதம் அறிமுகமாகினர். இதன்மூலம் 41 ஆண்டுகளுக்கு பின், ஒரே போட்டியில் (ஒருநாள்) 5 பேர் அறிமுகமாகினர். இதற்கு முன், 1980ல் மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் திலிப் ஜோஷி, கீர்த்தி ஆசாத், ரோஜர் பின்னி, சந்தீப் பாட்டீல், திருமலை ஸ்ரீனிவாசன் அறிமுகமாகினர்.

மூலக்கதை