'பெகாசஸ்' குற்றச்சாட்டு: விசாரிக்க குழு அமைப்பு

தினமலர்  தினமலர்
பெகாசஸ் குற்றச்சாட்டு: விசாரிக்க குழு அமைப்பு

ஜெருசலேம்:உலகளவில் 'பெகாசஸ்' மென்பொருள் வாயிலாக அரசியல் தலைவர்களை உளவு பார்த்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க, இஸ்ரேல் அரசு குழு அமைத்துள்ளது.மேற்காசியாவின் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த என்.எஸ்.ஓ., குழுமம், பெகாசஸ் என்ற உளவு மென்பொருளை தயாரித்து உலக நாடுகளுக்கு விற்பனை செய்துள்ளது.

குழு அறிக்கை



இந்த மென்பொருள் வாயிலாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் உட்பட அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோர் உளவு பார்க்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்நிலையில், இஸ்ரேல் பார்லிமென்ட் வெளி விவகாரங்கள் துறை தலைவர் ராம் பென் பரக் கூறியதாவது:பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரிக்க, பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அடங்கிய குழுவை இஸ்ரேல் ராணுவ அமைச்சகம் அமைத்துள்ளது.

பரிசீலனை



இதற்கு மாறாக அரசியல் தலைவர்கள் போன்ற தனி நபர்களை உளவு பார்க்க பெகாசஸ் விற்பனை செய்யப்பட்டிருப்பது உறுதியானால், என்.எஸ்.ஓ., நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

இஸ்ரேல் அரசின் இந்த முடிவை வரவேற்றுள்ள என்.எஸ்.ஓ., தலைமை செயல் அதிகாரி ஷாலவ் ஹூலியோ, ''இந்த விசாரணை வாயிலாக எங்கள் மீதான களங்கம் நீங்கும்; உண்மை வெளிச்சத்துக்கு வரும்,'' என்றார்.

பாக்., கோரிக்கை



பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக அலுவலகம், ஐ.நா.,வுக்கு விடுத்துள்ள கோரிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:பெகாசஸ் மென்பொருள் வாயிலாக, இந்திய அரசு சொந்த மக்களை மட்டுமின்றி, எங்கள் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட வெளிநாட்டு தலைவர்களையும் உளவு பார்த்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மிகத் தீவிரமான இப்பிரச்னையை ஐ.நா., அமைப்புகள் விசாரிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை