பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் வெளியானது: மாணவர்கள் பதிவிறக்கம் செய்தனர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் வெளியானது: மாணவர்கள் பதிவிறக்கம் செய்தனர்

சென்னை: பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல்களை தேர்வுத்துறை நேற்று வெளியிட்டதை அடுத்து மாணவர்கள் ஆர்வமுடன் தங்கள் மதிப்பெண் பட்டியல்களை பதிவிறக்கம் செய்தனர். தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடக்க வேண்டிய பிளஸ் 2 தேர்வு கொரோனா தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டது.

அதனால் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் உயர்கல்விக்கு மாணவர்கள் செல்லும்போது அவர்களுக்கு பிளஸ் 2 மதிப்பெண் கட்டாயம் என்பதால், பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் 10, பிளஸ் 1 வகுப்புகளில் எடுத்திருந்த மதிப்பெண்களை கணக்கிட்டு பிளஸ் 2 மதிப்பெண்கள் நிர்ணயம் செய்யப்படும் என்று அரசு அறிவித்தது.



அதன்படி, மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு, 19ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து 22ம் தேதி (நேற்று) முதல் மாணவர்கள், தங்கள் மதிப்பெண் பட்டியல்களை தேர்வு துறை இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தேர்வுத்துறை அறிவித்திருந்தது.

அதன்படி, மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும் மதிப்பெண் பட்டியல்களை பெற்று கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததால், பெரும்பாலான மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிக்கு நேற்று சென்று அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் மதிப்பெண் பட்டியல்களை பதிவிறக்கம் செய்தனர்.

ஏற்கனவே, இந்த மதிப்பெண் பட்டியல்கள் 22ம் தேதி காலை 11 மணி முதல் www. tn. gov. in, www. dge. tn. nic. in என்ற இணைய தளங்களில் மாணவர்கள், தங்கள் தேர்வு பதிவு எண்கள், பிறந்த தேதியை பதிவு செய்து மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி தேர்வுத்துறை மதிப்பெண் பட்டியல்களை நேற்று வெளியிட்டது.

பள்ளிகள் மூலம் மதிப்பெண் பட்டியல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளும் மாணவ மாணவியரின் மதிப்பெண் பட்டியல்களின் விவரங்கள் உடனடியாக வேலை வாய்ப்பு அலுவலக பதிவிலும் சேர்க்கும் பணியை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

.

மூலக்கதை