இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லை அருகே வெடிகுண்டுடன் பறந்த ‘ட்ரோனை’சுட்டு வீழ்த்தியது பாதுகாப்பு படை: இரு தீவிரவாதிகளும் சுட்டுக் கொலை

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்தியாபாகிஸ்தான் சர்வதேச எல்லை அருகே வெடிகுண்டுடன் பறந்த ‘ட்ரோனை’சுட்டு வீழ்த்தியது பாதுகாப்பு படை: இரு தீவிரவாதிகளும் சுட்டுக் கொலை

காஷ்மீர்: இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லை அருகே  வெடிகுண்டுடன் பறந்த ட்ரோனை பாதுகாப்பு படையினர் இன்று அதிகாலை சுட்டு வீழ்த்தினர். அதேநேரம், நேற்றிரவு பாரமுல்லாவில் பதுங்கியிருந்த 2 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர்.

இச்சம்பவங்களால் எல்லையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜம்மு விமானதள வளாகத்தில் உள்ள உயர் பாதுகாப்பு நிறைந்த விமானப்படை நிலைய தொழில்நுட்ப பகுதியில் கடந்த ஜூன் 27ம் தேதி குண்டு வெடித்தது.

அந்த வெடிகுண்டுகள் குறைந்த வீரியம் கொண்ட ஐஇடி வகையைச் சேர்ந்தவை என்பதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்தது.



ட்ரோன்கள் எனப்படும் ஆளில்லா விமானங்கள் மூலம் இந்த குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது. இந்த குண்டுவெடிப்பில் இந்திய விமானப் படையைச் சேர்ந்த 2 பேர் காயமடைந்தனர்.

ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதும் உடனடியாக ராணுவம் செயலில் இறங்கியது. ராடார் மூலம் கண்டறிந்து தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டதால் தொடர் தாக்குதல் நடத்தப்படவில்லை.

இவ்வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த அடுத்த சில மணி நேரங்களுக்கு பின்னர், காஷ்மீர் மாநிலத்தின் சர்வதேச எல்லைப்பகுதியில் மீண்டும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.



பெரிய அளவில் தாக்குதல் இல்லையென்றாலும் பாகிஸ்தானில் எல்லைப்பகுதியில் இருந்து தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இதனையடுத்து எல்லை பாதுகாப்பு படையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

ட்ரோன் தாக்குதலை தடுத்து நிறுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில், இன்று காலை அக்னூர் பகுதியில் பறந்து கொண்டிருந்த மர்ம ட்ரோன் ஒன்றை பாதுகாப்பு படையினர் அதிரடியாக சுட்டு வீழ்த்தினர்.

தரையில் விழுந்த ட்ரோனை முன்னெச்சரிக்கையுடன் எடுத்து பரிசோதனை நடத்தியதில், அதில் 5 கிலோ ஐ. இ. டி என்ற வெடிபொருள் இருந்தது.

அதனை மீட்ட பாதுகாப்பு படையினர் தொடர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பாதுகாப்பு படை வட்டாரங்கள் கூறுகையில், ‘சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோனில் இருந்து 5 கிலோ ஐ. இ. டி வெடிபொருள் மீட்கப்பட்டுள்ளது. இந்த வெடிபொருட்கள் காஷ்மீரில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளுக்கு சப்ளை செய்வதற்காக அனுப்பப்பட்டிருக்கலாம்.

அவை, உரிய நபரிடம் வந்து சேர்வதற்கு முன்பே பாதுகாப்பு படையினரின் கண்களில் சிக்கியது. இந்த ட்ரோன், இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் இருந்து 8 கி. மீ தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டது’ என்று தெரிவித்தன.



இதற்கிடையே, ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபோரா பகுதியில் தீவிரவாத அமைப்பின் தளபதி ஒருவன், மற்றொரு தீவிரவாதியுடன் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ராணுவத்தின் 22 ஆர்ஆர், எஸ்ஓஜி சோப்போர் மற்றும் சிஆர்பிஎஃப் 179, 177 மற்றும் 92 பட்டாலியன்களின் கூட்டுக் குழு, வார்போராவில் உள்ள வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து தேடுதல் வேட்டை நடத்தினர்.

முன்னதாக அந்த வீட்டை சுற்றியுள்ள பகுதிகளை சீல் வைத்தனர். பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்ததும், தீவிரவாதிகள் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் தீவிரவாத அமைப்பின் தளபதி ஒருவன், மற்றொரு தீவிரவாதி ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் உள்ளிட்ட ஆட்சேபகரமான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

தற்போது, ​​இப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தொடர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

.

மூலக்கதை