14 மணி நேர சோதனை நிறைவு; 10 மடங்கு சொத்து உயர்வு அம்பலம்: எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க திட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
14 மணி நேர சோதனை நிறைவு; 10 மடங்கு சொத்து உயர்வு அம்பலம்: எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க திட்டம்

சென்னை: சென்னை, கரூரில் முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கருக்கு சொந்தமான 26 இடங்களில் நடந்த விஜிலென்ஸ் சோதனை நேற்று இரவு நிறைவடைந்தது. இதில் அமைச்சராக இருந்த 5 ஆண்டுகளில் சொத்து மதிப்பு 10 மடங்கு உயர்ந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனவே சம்மன் அனுப்பி அவரிடம் இது தொடர்பாக விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம். ஆர். விஜயபாஸ்கர்.

அப்போது போக்குவரத்துத் துறையில் பணி நியமனம், பேருந்துகள் கொள்முதல், உதிரிபாகங்கள் வாங்கியது, குறிப்பிட்ட நிறுவனங்களிடம் தான் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் வாங்க வேண்டும் என கூறியது உள்ளிட்ட பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டு, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து ஏராளமான புகார்கள் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்றது.



 இதைத்தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் கந்தசாமி உத்தரவின்பேரில் ஐஜி பவானீஸ்வரி, எஸ். பி. சண்முகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் நடத்திய விசாரணையில் வருமானத்துக்கு அதிகமாக எம். ஆர். விஜயபாஸ்கர் சொத்து குவித்திருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து கரூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், நேற்று முன்தினம் எம். ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி விஜயலட்சமி, சகோதரர் சேகர்,  பங்குதாரராக உள்ள நிறுவனங்கள், உறவினர்கள், உதவியாளர்கள் மீது 2021 பிரிவு 13(2),13(1)(பி), 2018 மற்றும்  12,13(2), 13(1)(பி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

அதைத் தொடர்ந்து, 26 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினர் நேற்று காலை 7 மணிக்கு சென்னை உள்பட 26 இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனையை துவக்கினர்.



ெசன்னையை பொருத்தவரை ஆர். ஏ. புரத்தில் உள்ள சாய் கிருபா அடுக்குமாடி குடியிருப்பின் 2வது தளத்தில் எம். ஆர். விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு,  பெருங்களத்தூரில் உள்ள அவரது உதவியாளர் பாலசுப்பிரமணியன் வீடு,  வில்லிவாக்கம் 3வது எம்டிஎச் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பின்  3வது தளத்தில் வசித்து வரும் அவரது நண்பர் ரவிக்குமார் வீடு,  மேற்கு மாம்பலம் ராமகிருஷ்ணாபுரம் கோகுலம் காலனியில் உள்ள டெடி இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் உள்பட 6 இடங்களில் நள்ளிரவு வரை சோதனை நடந்தது. அதேபோல், 10 டிஎஸ்பிக்கள் தலைமையில் 200 போலீசார்  தனித்தனிக் குழுக்களாக பிரிந்து கரூர் சரஸ்வதி நகரில் உள்ள  விஜயபாஸ்கரின் வீடு, செல்வம் நகரில் உள்ள அவரது சாயப்பட்டறை, அலுவலகம், அட்டைபெட்டி தயாரிக்கும் நிறுவன அலுவலகம், அங்குள்ள அமைச்சரின் வீட்டிலும் சோதனை நடத்தினர்.

 

மேலும் எம். ஆர். விஜயபாஸ்கரின் தம்பி சேகர் குடியிருக்கும் ஆண்டாங்கோயில்  அபார்ட்மெண்ட்ஸ், வடிவேல் நகர் மில்கேட் அருகே உள்ள தறிப்பட்டறை வளாகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. கரூர்  ராமானுஜம் நகரில் அதிமுக பிரமுகரும், எம். ஆர். விஜயபாஸ்கரின் பினாமியான பரமசிவம் வீடு, கரூர் தோரணக்கல்பட்டியில் உள்ள முன்னாள் நகராட்சி கவுன்சிலரும், நில புரோக்கருமான ஏகாம்பரம் வீட்டிலும் சோதனை நடந்தது.

மேலும் அவரது உதவியாளராக இருந்த பாலசுப்ரமணியனின் ஆத்தூர் நத்தமேட்டில் உள்ள வீடு, மற்றொரு உதவியாளர் கார்த்திகேயனின் கரூர் முத்து நகர் வீடு, மற்றொரு  உதவியாளர் உப்பிடமங்கலம் ஜோதிவடத்தில் உள்ள ரமேஷ் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இதேபோல்  அத்திப்பாளையத்தில் உள்ள எம். ஆர். விஜயபாஸ்கரின் கல்குவாரிக்கு சொந்தமான மூன்று அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

கரூரில் மட்டும் 20 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இதில் 17 இடங்களில் மாலை 5 மணியுடன் சோதனை முடிந்தது.

செல்வம் நகர் சாயப்பட்டறை அலுவலகம், அட்டை கம்பெனி மற்றும் இங்குள்ள அமைச்சரின் வீடு ஆகிய 3 இடங்களில் மட்டும்  இரவு 9 மணி வரை லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். 14 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் நில பத்திரங்கள் உள்ளிட்ட பல கோடி மதிப்புடைய முக்கிய ஆவணங்கள், ரூ. 16லட்சம் ரொக்கம் உள்ளிட்டவை  கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இரவு 9. 15மணிக்கு அங்கிருந்து புறப்பட்ட லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் ஒரு பெட்டி மற்றும் துணி பையில் ஆவணங்கள், ரொக்கத்தை எடுத்து சென்றனர். இதேபோல் அவரது உதவியாளர்கள், கவுன்சிலர்கள், ஆதரவாளர்கள் வீடுகளிலும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



சென்னை, கரூர் மாவட்டங்களில் 26 இடங்களில் நடந்த சோதனையில் கணக்கில் வராத  ரூ. 25 லட்சத்து 56 ஆயிரம் ரொக்கம் மற்றும் பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள் மற்றும்  நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் சென்னை வீட்டில் 50 சவரன் நகை, இரண்டரை கிலோ வெள்ளிப் பொருட்கள் இருந்தன.

அவற்றை போலீசார் பதிவு செய்து கொண்டு திருப்பி அளித்தனர். இந்த சோதனையின்போது சென்னை ஆர். ஏ. புரத்தில் உள்ள  வீட்டில் எம். ஆர். விஜயபாஸ்கர் இருந்தார்.

அப்போது அவரிடம், அமைச்சர் பதவிக்கு வருவதற்கு முன்பு இருந்த  சொத்துக்கள் மதிப்பும்,  அமைச்சராக இருந்தபோது சேர்த்த சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

அதில் 26 இடங்களில்  கைப்பற்றப்பட்ட  ஆவணங்களை வைத்து கணக்காய்வு செய்த போது, 10 மடங்கிற்கு மேல் சொத்துக்கள் உயர்ந்தது தெரியவந்தது.

குறிப்பாக  கடந்த 5 ஆண்டு காலத்தில் அவரது மனைவி, அவரது சகோதரர் சேகர்  மற்றும்  உறவினர்கள், பினாமிகள் பெயரில் பல கோடி ரூபாய்க்கு சொத்துக்கள்  வாங்கி குவித்துள்ளார். இவை எந்த வருமானத்தில் வாங்கப்பட்டது, அதற்கான வருமானம் என்ன என்பது உள்ளிட்ட  கேள்விகளை கேட்டு  எம். ஆர். விஜயபாஸ்கரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை  நடத்தினர்.   அதற்கு எம். ஆர். விஜயபாஸ்கர் அளித்த பதிலை வாக்குமூலமாக  லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பதிவு செய்து  கொண்டனர்.



இன்னும் ஓரிரு நாளில் சம்மன் அனுப்பி விஜயபாஸ்கரை வரவழைத்து அவரிடம் விசாரணை நடத்தவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் திட்டமிட்டுள்ளனர். அப்போது அவர் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இதனால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.


.

மூலக்கதை