வருமானத்திற்கு அதிகமாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் சொத்து குவித்ததாக புகார் எதிரொலி: அதிமுக மாஜி அமைச்சரின் 21 இடங்களில் ரெய்டு..!

தமிழ் முரசு  தமிழ் முரசு
வருமானத்திற்கு அதிகமாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் சொத்து குவித்ததாக புகார் எதிரொலி: அதிமுக மாஜி அமைச்சரின் 21 இடங்களில் ரெய்டு..!

சென்னை: போக்குவரத்து துறையில் முறைகேடு, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது உள்ளிட்ட புகாரின் அடிப்படையில் அதிமுக முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கரின் சென்னையில் உள்ள வீடு, கரூரில் உள்ள வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், பிஏக்கள், நண்பர், உறவினர்கள் வீடுகள், சாயப்பட்டறை, கல்குவாரி உள்பட 21 இடங்களில் 20 டிஎஸ்பிக்கள் தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதில் வங்கி கணக்கு புத்தகங்கள், முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

கரூர் மாவட்ட அதிமுக செயலாளர்  எம். ஆர். விஜயபாஸ்கர். இவர் கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை  அமைச்சராக இருந்தார்.

சமீபத்தில் நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் கரூர்  தொகுதியில் திமுகவை சேர்ந்த அமைச்சர் செந்தில்பாலாஜியை எதிர்த்து போட்டியிட்டு  தோல்வியடைந்தார். எம். ஆர். விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்தபோது  போக்குவரத்துத்துறையில் பணி நியமனம், பேருந்துகள் கொள்முதல், உதிரிபாகங்கள் வாங்கியது என பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டு, வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக கூறப்படுகிறது.



இதுகுறித்து ஏராளமான புகார்கள் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசுக்கு சென்றது. அதைத் தொடர்ந்து டிஜிபி கந்தசாமி உத்தரவின்பேரில் ஐஜி பவானீஸ்வரி, எஸ்பி சண்முகம் தலைமையில் 21 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். போக்குவரத்து  துறை அமைச்சராக எம். ஆர். விஜயபாஸ்கர் 5 ஆண்டுகள் பதவி வகித்த வந்தார்.

இந்த நேரத்தில், சென்னை மயிலாப்பூர்,  ஆர். ஏ. புரத்தில் உள்ள சாய்  கிருபா அடுக்குமாடி குடியிருப்பின் 2வது  தளத்தில் தனக்கு சொந்தமான  வீட்டில் தங்குவது வழக்கம். இங்கு தன்னுடைய வங்கி  கணக்குகள் பராமரிப்பு  புத்தகம், முக்கிய ஆவணங்கள் ஆகியவற்றை இந்த வீட்டில்  இருந்தவாறே  செயல்படுத்தி வந்துள்ளார்.

அந்த வகையில், அந்த அடுக்குமாடி குடியிருப்பில்  உள்ள  எம். ஆர். விஜயபாஸ்கரின் வீட்டில் இன்று காலை 6. 30 மணிக்கு டிஎஸ்பி ராமச்சந்திரமூர்த்தி தலைமையில்  சுமார்  5க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். வீட்டில் விஜயபாஸ்கர் இருந்தார்.

போலீசாரைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் கொள்ளையடிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தது.

இதனால் கொள்ளையடித்த அனைத்து மாஜி அமைச்சர்களுமே பீதியில் இருந்து வந்தனர்.

அதில் தற்போது முதன் முதலாக தான் சிக்கியது எம். ஆர். விஜயபாஸ்கருக்கு அதிர்ச்சி அளித்தது.

அதன்பின்னர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், கம்ப்யூட்டர், பென்டிரைவ், சொத்து ஆவணங்கள் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர்.    இதேபோல், எம். ஆர். விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்த போது அவருக்கு வந்த   பல்வேறு ஆவணங்களையும் தொடர்ந்து ஆய்வு செய்தனர். குறிப்பாக, பென்டிரைவில்   உள்ள டிஜிட்டல் வடிவிலான ஆவணங்களையும் ஆய்வு செய்தனர்.

யார், யாருக்கு   பணப்பறிமாற்றம் நடைபெற்றது என்பது குறித்தும் ஆய்வு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர். அதேநேரத்தில், கரூர் ஆண்டாங் கோயில் சரஸ்வதி நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீட்டிற்கு லஞ்ச ஒழிப்புத்துறை 5 டிஎஸ்பிக்கள் தலைமையில்  10 வாகனங்களில் இன்று காலை 6 மணிக்கு சுமார் 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் போலீசார் வந்தனர்.

பின்னர், வீட்டிற்குள் அதிரடியாக புகுந்து அங்குலம் அங்குலமாக சோதனையிட்டனர். அப்போது, விஜயபாஸ்கர் வீட்டில் இல்லை.

அங்கிருந்த குடும்ப உறுப்பினர்களிடம் கேட்டதற்கு, அவர் சென்னை ஆர். ஏ. புரத்தில் உள்ள வீட்டில் இருப்பதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, 30 குழுக்களாக பிரிந்த அதிகாரிகள் கரூர் மாவட்டத்தில் கரூர் வடிவேல் மற்றும் செல்வம் நகரில் ரெயின்போ சாயப்பட்டறை மற்றும் கம்பெனிக்குச் சொந்தமான 3 இடங்கள், ஆண்டாங்கோவில் கிழக்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் ஒரு வீடு, ரெயின்போ சாயப்பட்டறை  பேக்கிங் கம்பெனியின் 3 இடங்கள், நூல் மில்லுக்குச் சொந்தமான 2  இடம், குப்புச்சிபாளையத்தில் உள்ள டிவி வணிக நிறுவனம், ரெயின்போ  தொழிற்சாலை, வெள்ளியனையில் 2 இடம், பராமத்தியில் உள்ள ரெயின்போ ப்ளூமெட்டல்  கம்பெனி, வெங்கமேடு ராம்நகரில் உள்ள தம்பி சேகர் வீடு, உதவியாளர்கள் கரூர் செங்குந்தபுரத்தில் உள்ள கார்த்தி, கரூர் உப்பிடமங்கலத்தில் உள்ள ரமேஷ் வீடு என 20 இடங்களில் சோதனை தொடங்கியது.

கரூரில் மட்டும் 20 இடங்களில் சோதனை நடத்தப்படுவதால், எஸ்பி சுந்தரவடிவேல் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அனைத்து இடங்களில் இருந்து யாரையும் வெளியே செல்ல லஞ்ச ஒழிப்பு போலீசார் அனுமதிக்கவில்லை.

சோதனை நடக்கும் இடங்களில் அதிமுகவினர் செல்வதை தடுக்க 250க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சோதனையில் வீடு, அலுவலகங்களில் இருந்து முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

அதிமுக ஆட்சிக்கு முடிவுக்கு வந்த பிறகு முதல் முறையாக முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான 21 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தச் சோதனையில் பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், சொத்து குவிப்புக்கான ஆதாரங்கள், வங்கி கணக்குகள், பணம், நகை ஆகியவை கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

.

மூலக்கதை