நல்லா வந்தாரு போங்க! சேவையே இல்லாத லீவு நாளில்...  சேவையை ஆய்வு செய்த அமைச்சர்!

தினமலர்  தினமலர்
நல்லா வந்தாரு போங்க! சேவையே இல்லாத லீவு நாளில்...  சேவையை ஆய்வு செய்த அமைச்சர்!

கோவை : சேவையே இல்லாத, அரசு விடுமுறை தினமான நேற்று, கோவையில் இ-சேவை மையத்தின் செயல்பாட்டை, தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு செய்தார்.பக்ரீத் பண்டிகை என்பதால், நேற்று அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், கோவை வந்திருந்த, தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ், 'டைடல் பார்க்' வளாகத்தில் கூடுதல் கட்டுமான பணியை பார்வையிட்டார்.பின், மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் உள்ள, இ-சேவை மையத்துக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இதற்காக, மைய ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு இருந்தனர்.அரசு விடுமுறை தினம் என்பதால், பொதுமக்கள் யாரும் வரவில்லை. மையத்தின் செயல்பாடு களை, ஊழியர்களிடம் அமைச்சர் விசாரித்தார். சான்றிதழ் வழங்க எவ்வளவு கட்டணம் வசூலிக்கிறீர்கள்; ரசீது கொடுப்பீர்களா; இணைய வேகம் எப்படியிருக்கிறது, உங்களுக்கு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா என, கேள்வி கேட்டார். 'அதற்கு, பிரச்னை ஏதும் இல்லை' என்று ஊழியர் கூறினார்.'கட்டண விகிதங்கள் எவ்வளவு; அதை பற்றிய அறிவிப்பு பலகை எங்கே' என கேட்டதும், ஒரு மூலையில் இருந்த போர்டை காட்டினர். பொதுமக்கள் பார்வையில் தெரியும்படி வைக்க, அமைச்சர் அறிவுறுத்தினார்.

பெயரளவில் முடிந்த ஆய்வுஆதார் மையத்தில், நாளொன்றுக்கு, 30 நபருக்கே 'அப்டேட்' செய்யப்படுகிறது. காலை, 9:00 மணிக்குச் சென்று, டோக்கன் பெற வேண்டும். டோக்கன் வரிசைப்படி, 'அப்டேட்' செய்யப்படுகிறது.பணிக்குச் செல்வோர், அரை நாள் விடுப்பு எடுத்து விட்டு, வர வேண்டியிருக்கிறது. 30 பேருக்கு மேல் வந்தால், திருப்பி அனுப்புகின்றனர். அவர்கள் வெவ்வேறு இடங்களில் செயல்படும் மையங்களுக்கு அலைகின்றனர்.இதுபோன்ற பிரச்னைகளை, அரசு அலுவல் நாளில் ஆய்வு செய்திருந்தால், அமைச்சரின் நேரடி கவனத்துக்கு சென்றிருக்கும்.நேற்று நடந்த ஆய்வு, ஏதோ பெயரளவுக்கு நடந்தது போல் இருந்தது.

மூலக்கதை