இந்திய வீரர்களுக்கு டிராவிட் பாராட்டு

தினகரன்  தினகரன்
இந்திய வீரர்களுக்கு டிராவிட் பாராட்டு

கொழும்பு: இலங்கை அணியுடன் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் கடைசி வரை போராடி வெற்றியை வசப்படுத்திய இந்திய அணி வீரர்களை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பாராட்டியுள்ளார். கொழும்புவில் நேற்று முன்தினம் நடந்த இப்போட்டியில், 276 ரன் என்ற இலக்கை துரத்திய இந்தியா 35.1 ஓவரில் 193 ரன்னுக்கு 7 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், தீபக் சாஹர் - புவனேஷ்வர் குமார் இணைந்து 8வது விக்கெட்டுக்கு ஆட்டமிழக்காமல் 84 ரன் சேர்த்தனர். இந்தியா 49.1 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 277 ரன் எடுத்து வென்றது. தீபக் 69* ரன் (82 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்), புவனேஷ்வர் 19* ரன் விளாசினர். முன்னதாக, தவான் 29, மணிஷ் 37, சூரியகுமார் 53, க்ருணல் பாண்டியா 35 ரன் எடுத்தனர். இந்தியா 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. நெருக்கடியான கட்டத்திலும் மன உறுதியுடன் போராடி வெற்றியை வசப்படுத்திய இந்திய அணி வீரர்களை பயிற்சியாளர் டிராவிட் வெகுவாகப் பாராட்டி உள்ளார். 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கொழும்புவில் நாளை நடக்கிறது. அதைத் தொடர்ந்து, இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோத உள்ளன.

மூலக்கதை