பூமியை நாசமாக்கும் விண்வெளி சுற்றுலா: எரிபொருள் கலவையால் ஓசோனுக்கு ஆபத்து மழையும், ஆக்சிஜனும் கிடைப்பதை பாதிக்கும்

தினகரன்  தினகரன்
பூமியை நாசமாக்கும் விண்வெளி சுற்றுலா: எரிபொருள் கலவையால் ஓசோனுக்கு ஆபத்து மழையும், ஆக்சிஜனும் கிடைப்பதை பாதிக்கும்

லண்டன்: மனிதர்களை விண்வெளிக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதில் தனியார் நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றன. இதில், இங்கிலாந்து தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் கேலக்டிக், அமேசான் நிறுவனர் ஜெப் பெசோசின் ப்ளூ ஆர்ஜின், எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. சமீபத்தில் ரிச்சர்ட் பிரான்சன், இந்திய வம்சாவளி சிரிஷா உட்பட தனது குழுவினருடன் யூனிட்டி 22 விண்கலத்தின் மூலம் வெற்றிகரமாக விண்வெளி சென்று திரும்பினார். இதேபோல், அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் மற்றும் அவரது குழுவினர், நியூ ஷெப்பர்ட் ராக்கெட் மூலமாக நேற்று முன்தினம் வெற்றிகரமாக விண்வெளி சென்று பூமிக்கு திரும்பினர். பிரான்சன் சென்றதை விட 16 கிமீ அதிக உயரத்திற்கு சென்று பெசோஸ் திரும்பினர். இதன் மூலம், தன் வாழ்நாள் கனவு நனவானதாக கூறிய பெசோஸ், இதுவே தன் வாழ்நாளின் பொன்னாள் என பெருமிதம் அடைந்தார். இந்நிலையில், ஏற்கனவே பல்வேறு மாசுக்களால் சீரழிந்து கிடக்கும் வளிமண்டலம், விண்வெளி சுற்றுலா தொடங்கப்பட்டால் பெரியளவில் நாசத்தை சந்திக்கும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். விண்வெளிக்கு ஏவப்படும் ராக்கெட்டுகள் சராசரியாக விமானங்களை விட 100 மடங்கு அதிக கார்பன்டை ஆக்சைடையும், ராக்கெட்டை உந்திச் செல்லும் பாகங்கள் அதிகமான நைட்ரஜன் ஆக்சைடையும் வெளியிடும். இவை, ஏற்கனவே பாதித்துள்ள ஓசோன் படலத்தை மேலும் பாதிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் குழு ஆண்டுக்கு 400 முறை விண்வெளிக்கு ராக்கெட்டை ஏவப் போவதாக அறிவித்துள்ளது. அமேசான் நிறுவனமும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் இன்னும் இந்த எண்ணிக்கையை அறிவிக்கவில்லை. இந்த நிறுவனங்கள் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ஆயிரம் முறையாவது ராக்கெட்டுகளை ஏவும் என்று தெரிகிறது. இதனால், விண்வெளி சுற்றுலா திட்டத்தால் விண்வெளியில் ஏற்படப் போகும் பாதிப்புகளின் விவரம் வருமாறு:* பெசோசின் ப்ளூ ஆர்ஜின் ராக்கெட்டுகளில் திரவ ஹைட்ரஜன், திரவ ஆக்சிஜன் ஆகியவை உந்து சக்திக்கு பயன்படுத்தப்படுகின்றன.  * பிரான்சனின் வி.எஸ்.எஸ் யூனிட்டி, திட கார்பன் எரிபொருளையும் திரவ ஆக்சிஜன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு (சிரிக்கும் வாயு) ஆகியவற்றைக் கொண்ட ஒரு கலப்பின எரிபொருளை உந்துசக்திக்கு பயன்படுத்துகிறது.  * ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டில் திரவ மண்ணெண்ணெயயும், திரவ ஆக்சிஜனும் பயன்படுத்தப்படுகின்றன.* இந்த எரிபொருட்கள் விண்வெளியில் கிரீன்ஹவுஸ் வாயுக்களையும், காற்று மாசுக்களையும் உருவாக்குகின்றன. இவை மேகத்தின் நீராவி ஈர்ப்பு சக்தியை பாதிக்கின்றன.* இந்த  எரிவாயுக்களின் கலவைகள், ஓசோன் படலத்தை பாதிப்பதுடன், மழைபொழிவு, இயற்கையான ஆக்சிஜன் போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

மூலக்கதை