ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத வகையில் பேய்மழை வெள்ளத்தில் மிதக்கும் மத்திய சீனா: 25 பேர் பலி; 12.4 லட்சம் பேர் பாதிப்பு

தினகரன்  தினகரன்
ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத வகையில் பேய்மழை வெள்ளத்தில் மிதக்கும் மத்திய சீனா: 25 பேர் பலி; 12.4 லட்சம் பேர் பாதிப்பு

பீஜிங்: ஐரோப்பிய நாடுகளை புரட்டிப் போட்ட மழை, சீனாவையும் நேற்று அடித்து துவம்சம் செய்து விட்டது. கடந்த ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத வகையில் பெய்த மழையால் ஹெனான் மாகாணம் ஒரே நாள் மழையால் வெள்ளக்காடாகி விட்டது. இதில், இதுவரை 25 பேர் பலியாகி உள்ளனர். 12.4 லட்சம் மக்கள் பாதித்துள்ளனர். உலகம் முழுவதும் இயற்கை பேரிடர்கள் அதிகரித்துள்ளன. ஜெர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கடந்த வாரம் பேய்மழை பெய்து, 200க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதேபோல், சீனாவிலும் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக, மத்திய சீன பகுதியில் உள்ள ஹெனான் மாகாணமே வெள்ளத்தில் மிதக்கின்றது. இதன் தலைநகர் செங்சாவ்கில் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இங்கு ஆண்டுக்கு சராசரியாக 640 மி.மீ. மழை பெய்யும். ஆனால், நேற்று முன்தினம் ஒரே நாளில் 24 மணி நேரத்தில் 457.5 மிமீ மழை கொட்டித் தீர்த்தது. கடந்த ஆயிரம் இல்லாத ஆண்டுகளில் இங்கு இவ்வளவு பெரிய அளவில் மழை பெய்தது இல்லை. இதன் காரணமாக மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. போக்குவரத்து முற்றிலுமாக முடங்கி உள்ளது. வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சுரங்க ரயில் பாதையிலும் வெள்ளநீர் புகுந்ததால் ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 25 பேர் பலியாகி உள்ளனர். இதில், சுரங்க ரயில்பாதையில் புகுந்த வெள்ளத்தில் சிக்கி பலியான 12 பேரும் அடங்குவார்கள். மாகாணமே வெள்ளத்தில் மூழ்கியதால் தாழ்வான பகுதிகளில் வசித்த சுமார் 1.6 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு இடங்களிலும் நூற்றுக்கணக்கான கார்களும், வாகனங்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. செங்சாவ் மற்றும் இதர நகரங்களில் ஆறு, ஏரிகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. யிச்சுவான் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக அணை சேதமடைந்து உள்ளதால், அது எப்போது வேண்டுமானாலும் உடையும் அபாயம் நிலவி வருகிறது. இதனால், அந்த பகுதிகளில் இருப்பவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டு உள்ளனர். பேய் மழையால் மின்சாரம்இன்றி, முகாம்களுக்கு அனுப்பப்பட்டு, வெள்ளத்தில் தவித்து என 12.4 லட்சம்  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிக்கு ராணுவம் அழைக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வெள்ளத்தை தடுக்கவும், பேரிடர் மேலாண்மை படையினரை உடனடியாக மீட்பு பணிகளில் ஈடுபடுத்தவும் அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார். மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. அடுத்த சில நாட்களுக்கும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.* பேருந்துகள் இயக்கப்படும் 80 வழித்தடங்கள் வெள்ளநீரால் துண்டிக்கப்பட்டுள்ளது.* 160 ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன.* செங்சாவ் விமான நிலையத்தில் 260 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.* சுரங்க ரயிலில் புகுந்த வெள்ளம் நிமிடத்துக்கு நிமிடம் திக்... திக்...செங்சாவ் நகரின் லைன் பை ரயில் சுரங்கப்பாதையில் பாய்ந்த வெள்ளம், ரயிலுக்குள் புகுந்துள்ளது. கதவு மற்றும் ஜன்னல்களின் விரிசல்கள் வழியாக சிறிது சிறிதாக வெள்ள நீர் உள்ளே புகுந்து, அரை மணி நேரத்தில் பயணிகளின் கழுத்து வரை நிரம்பியது. ரயிலின் கதவுகளை திறக்க முடியாததால் பயணிகள் வெளியேற முடியாமல் சிக்கினார்கள். இருக்கை கம்பிகளை பிடித்துக் கொண்டு தங்களை யாராவது காப்பாற்றுவார்களா என அச்சத்துடன் நின்றிருக்கும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிலர் பயத்துடனும், சிலர்  தங்கள் குழந்தைகளை தலைக்கு மேலே தூக்கியபடியும் நின்றிருந்தனர். சேரும் சகதியுமாக கழுத்து வரை மழை நீர் தேங்கியதால் சுவாசிப்பதற்கே சிரமம் அடைந்து திணறினர். இந்நிலையில், ரயிலின் ஜன்னல்களை மீட்பு குழுவினர் உடைத்து பயணிகள் மீட்கப்பட்டனர். ரயில் பெட்டியின் மேற்கூரையும் வெட்டி எடுக்கப்பட்டு, பயணிகள் மீட்கப்பட்டனர். இந்த காட்சிகள் நிமிடத்துக்கு நிமிடம் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மூலக்கதை