விண் கல் பூமியை தாக்குமா?

தினமலர்  தினமலர்
விண் கல் பூமியை தாக்குமா?

புதுடில்லி:விண்வெளியில் இருந்து, பூமிக்கு அருகே பயங்கர வேகத்தில் விண் கல் ஒன்று வருவதாக, அமெரிக்க விண்வெளி ஆய்வு கழகமான நாசா தெரிவித்துள்ளது.

சூரிய மண்டலத்தில் லட்சக்கணக்கான விண்கற்களும், உலோகப் பாறைகளும் சுற்றி வருகின்றன.வாயு, துாசி போன்றவற்றால் உருவான இந்த விண்கற்கள், அதி வேகமாக பூமியின் காற்று மண்டலத்தில் நுழையும்போது, உராய்வு காரணமாக, வளி மண்டலத்திலேயே எரிந்து சாம்பலாகி விடுகின்றன. சில விண்கற்கள் மட்டுமே பூமியில் விழுகின்றன.

இந்நிலையில், '2008 கோ20' என்ற பிரமாண்ட விண் கல், மணிக்கு 18 ஆயிரம் கி.மீ., வேகத்தில் பூமியை நோக்கி வருவதாக, நாசா தெரிவித்துஉள்ளது.இந்த விண் கல், 220 மீட்டர் விட்டத்தில், ஒரு விளையாட்டு மைதானம் அல்லது தாஜ்மகால் போல மூன்று மடங்கு பெரியது. வரும், 24ம் தேதி, இந்திய நேரப்படி, அதிகாலை 1:05 மணிக்கு இந்த விண் கல் பூமியை கடக்க உள்ளது.

அப்போது, பூமியில் இருந்து 40 லட்சம் கி.மீ., துாரம் இருக்கும் என்பதால், விண்கல் பூமியை தாக்கும் வாய்ப்பு மிகக் குறைவாகவே உள்ளதாக, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எனினும், இந்த விண்கல், பூமிக்கு அருகே 'அப்பல்லோ' என்ற சுற்று வட்டப் பாதையில் வருவதால், எதிரே வரும் பொருட்களுக்கு மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்தும் என, நாசா தெரிவித்துள்ளது↓.

மூலக்கதை