கொட்டித் தீர்த்த கன மழை: சீனாவில் 25 பேர் பலி

தினமலர்  தினமலர்
கொட்டித் தீர்த்த கன மழை: சீனாவில் 25 பேர் பலி

பீஜிங்:சீனாவின் மத்திய ஹெனான் மாகாணத்தில், 1,000 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை கொட்டி தீர்த்ததில் இதுவரை 25 பேர் பலியாகி உள்ளனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

12 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்.அண்டை நாடான சீனாவின், மத்திய ஹெனான் மாகாணத்தில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. நேற்று முன் தினம் ஒரே நாளில் 46 செ.மீ., மழை பொழிந்தது. இதில், மத்திய ஹெனான் மாகாணம் மற்றும் அதன் தலைநகர் ஸெங்சோ ஆகியவை வெள்ளத்தில் மூழ்கின. ஸெங்சோ நகரில் உள்ள சுரங்க ரயில் நிலையங்களில் மழை வெள்ளம் சூழ்ந்தது.

ரயில் பயணியர் பலரும் சுரங்கத்தை விட்டு வெளியேற முடியாமல் கழுத்தளவு தண்ணீரில் உள்ளே சிக்கினர். இவர்களில் 12 பேர் இறந்தனர். மாகாணம் முழுவதும் பஸ், ரயில், விமான போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது.ஹெனான் மாகாணத்தின், இச்சுவான் என்ற இடத்தில் உள்ள அணையில், 20 மீட்டர் துாரத்திற்கு பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், அணை எந்த நேரத்திலும் உடைய வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதற்காக, ஹெர்னான் மாகாணத்துக்கு, சீன ராணுவத்தை அந்நாட்டு அதிபர் ஷீ ஜிங்பிங் அனுப்பி வைத்துள்ளார்.சீனாவில், 1,000 ஆண்டுகளில் இல்லாத அளவில், பெரும் மழை கொட்டி தீர்த்ததாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 25 பேர் பலியாகி உள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர், பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். 12 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

மூலக்கதை