‘ஆன்லைன்’ தள்ளுபடி விற்பனைக்கு நுகர்வோர் தரப்பில் ஆதரவு

தினமலர்  தினமலர்
‘ஆன்லைன்’ தள்ளுபடி விற்பனைக்கு நுகர்வோர் தரப்பில் ஆதரவு

புதுடில்லி:மின்னணு வர்த்தக நிறுவனங்களின் அதிகளவிலான தள்ளுபடி விற்பனைகளுக்கு, அரசு தடை விதிக்கக்கூடாது என, 72 சதவீத ‘ஆன்லைன்’ நுகர்வோர்கள், கணக்கெடுப்பு ஒன்றில் தெரிவித்து உள்ளனர்.

‘லோக்கல் சர்க்கிள்ஸ்’ நிறுவனத்தின் ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:நாட்டிலுள்ள, 394 மாவட்டங்களில், 82 ஆயிரம் பேர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.ஆன்லைன் வாயிலான வர்த்தகம், இந்தியாவில் அதிகரித்து வருகிறது. கடந்த 12 மாதங்களில், ஆன்லைன் வாயிலாக பொருட்களை வாங்குவோர் எண்ணிக்கை, 49 சதவீதமாக அதிகரித்துள்ளது. காரணம், பாதுகாப்பானதாகவும், சவுகரியமானதாகவும், விலை குறைவாக இருப்பதாகவும் அவர்கள் கருதுவது தான்.

ஆய்வில் பங்கேற்றவர்களில் 72 சதவீதம் பேர், மின்னணு வர்த்தக நிறுவனங்களின் விற்பனைகளை தடை செய்வது, கட்டுப்படுத்துவது, தலையிடுவது போன்றவற்றில் அரசு தலையீடு செய்ய வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.இதற்கு இவர்கள், தற்போதைய சிக்கலான சூழலில், சகாய விலையில் பொருட்களை வாங்க முடிவதால், பணத்தை சேமிக்க முடிகிறது என்பதை காரணமாக தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜூன் மாதத்தில், மத்திய அரசு, ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் சிறப்பு தள்ளுபடி உள்ளிட்ட, ‘பிளாஷ்’ விற்பனைகளை தடை செய்வது குறித்த வரைவு ஒன்றை வெளியிட்டது.இந்நிலையில், நுகர்வோர் தரப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக, லோக்கல் சர்க்கிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை