பெண் பணியாளர்களுக்கு பாலியல் தொந்தரவு நடவடிக்கை எடுக்க கமிஷனருக்கு உத்தரவு

தினமலர்  தினமலர்
பெண் பணியாளர்களுக்கு பாலியல் தொந்தரவு நடவடிக்கை எடுக்க கமிஷனருக்கு உத்தரவு

சென்னை,-சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் பெண் துாய்மை பணியாளர்களுக்கு பாலியல் தொந்தரவு இருப்பதாக, பாதிக்கப்பட்ட பெண்கள் தேசிய துப்புரவாளர் ஆணைய தலைவர் வெங்கடேசனிடம் புகார் தெரிவித்து உள்ளனர்.

சம்பந்தப்பட்டவர்கள் மீது, மாநகராட்சி கமிஷனர் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சி, அம்மா மாளிகையில், துப்புரவு பணியாளர்களுடனான ஆலோசனை கூட்டம், தேசிய துாய்மை பணியாளர் நல ஆணைய தலைவர் வெங்கடேசன், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் தலைமையில் நேற்று நடந்தது. குற்றச்சாட்டுகூட்டத்தில், மாநகராட்சியில் பணி நீக்கம் செய்யப்பட்ட, 12 ஆயிரம் துாய்மை பணியாளர்களும் பங்கேற்றனர்.

அப்போது, பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர். குறிப்பாக, பெண் துாய்மை பணியாளர்கள், தங்களுக்கு பாலியல் தொந்தரவு வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.கூட்டத்திற்கு பின், ஆணைய தலைவர் வெங்கடேசன் அளித்த பேட்டி:பணி நீக்கம் செய்யப்பட்ட, 12 ஆயிரம் ஊழியர்கள் மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர். அ.தி.மு.க., ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த தற்போதைய முதல்வர் ஸ்டாலின், பணி நீக்கம் செய்யப்பட்ட துாய்மை பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என, கோரிக்கை வைத்தார்.

அது குறித்த கடிதத்தையும், தற்போதைய மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், அப்போதைய மாநகராட்சி கமிஷனரிடம் அளித்தார்.தற்போது, அவர்களே ஆட்சியில் உள்ளதால், அன்று அவர்கள் வைத்த அதே கோரிக்கையை, எங்கள் ஆணையம் சார்பாக, அரசிற்கு தற்போது நாங்கள் வைக்கிறோம். விசாரணைபணி நீக்கம் செய்யப்பட்டவர்களை, வாய்ப்புள்ள துறைகளில் மீண்டும் பணியமர்த்த வேண்டும்.துப்புரவு பணியாளர்கள் மூன்று பேர் பாலியல் தொந்தரவு உள்ளதாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர். மேற்பார்வையாளர், தங்களை அநாகரிகமாக பேசுவதாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். இந்த புகார்கள் தொடர்பாக, கமிஷனர் தலைமையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.எவ்வளவு பணம் கொடுத்தாலும், மனித கழிவுகளை அள்ளும் பணியில் துாய்மை பணியாளர்கள் ஈடுபட கூடாது. அதை செய்யுமாறு யாரேனும் வற்புறுத்தினால், அவர்கள் மீது புகார் அளிக்கலாம்.

நிவாரணம்

துப்புரவு பணியாளர்களை துடைப்பம் வாங்க சொல்வதாக புகார்கள் வந்தன. அவ்வாறு கூறியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.கொரோனா காலத்தில் உயிரிழந்துள்ள துப்புரவு பணியாளர்கள் கணக்கெடுத்து, அவர்களுக்கு, 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்; துாய்மை பணியாளர்களுக்கு தனி ஆணையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை, தமிழக முதல்வரிடம் வைத்துஉள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை