கட்டாயம்; காவலர் உடல் தகுதி தேர்வுக்கு கொரோனா பரிசோதனை சான்று...சிபாரிசு செய்வதாக கூறினால் நம்பாதீர்கள் என டி.ஐ.ஜி., எச்சரிக்கை

தினமலர்  தினமலர்
கட்டாயம்; காவலர் உடல் தகுதி தேர்வுக்கு கொரோனா பரிசோதனை சான்று...சிபாரிசு செய்வதாக கூறினால் நம்பாதீர்கள் என டி.ஐ.ஜி., எச்சரிக்கை

இரண்டாம் நிலைக் காவலர்கள், சிறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான உடல்தகுதி தேர்வு நடைபெறும் இடத்திற்கு அருகிலோ அல்லது வேறு இடத்திலோ சிபாரிசு மூலம் பணி வாங்கித் தருவதாக வெளி நபர்கள் கூறினால் யாரும் நம்ப வேண்டாம் என டி.ஐ.ஜி., - எஸ்.பி., தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் மூலம் ஒருங்கிணைந்த இரண்டாம் நிலைக் காவலர்கள், சிறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்தாண்டு நடந்தது. இந்த தேர்வில் தேர்ச்சியடைந்த விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 2,256 ஆண்கள், 700 பெண்கள் உட்பட மொத்தம் 2,956 பேருக்கு சான்றிதழ், சரிபார்த்தல், உடல்கூறு அளத்தல், உடல் தகுதி, தேர்வுகள் வரும் 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 3ம் தேதி வரை நடக்கிறது.விழுப்புரம், காகுப்பம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ள இந்த தேர்வில் பங்கேற்போருக்கு, அழைப்பு கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் ஆஜராக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.தேர்வுக்கு வருவோர், நான்கு நாட்களுக்கு முன் கொரோனா பரிசோதனை எடுத்துக் கொள்ள வேண்டும். கொரோனா பரிசோதனை மருத்துவச் சான்றிதழ் கட்டாயம் கொண்டு வர வேண்டும். இல்லையெனில் தேர்வர்களுக்கான அனுமதி மறுக்கப்படும்.கொரோனா உறுதியானவர்கள் தேர்வில் பங்கேற்கத் தேவையில்லை. இவர்கள் மூன்றாம் நபர் மூலம் விண்ணப்பம், அழைப்பு கடிதம் நகல் மற்றும் மருத்துவச் சான்றோடு குறிப்பிட்ட தேதியில் தேர்வு மைய தலைவரிடம் நேரில் தெரிவிக்க வேண்டும். அவர்களுக்கு பின்னர் தேதி அறிவிக்கப்பட்டு தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.கொரோனாவையொட்டி, சமூக இடைவெளி மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தினமும் காலை 6:00 மணி முதல் 9:00 வரை 300 தேர்வர்களும், 9:00 மணிக்கு மேல் 200 தேர்வர்களும் அனுமதிக்கப்படுவர்.முதலில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு உடற்கூறு அளக்கப்பட்டு, அதில் தகுதியுள்ளவர்கள், வரும் ஆகஸ்ட் 4ம் தேதி முதல் நடைபெறும் உடல்திறன் தேர்வில் பங்கேற்கும் அனுமதியை பெறுகின்றனர். தேர்வில் பங்கேற்க வருவோர் 2 முகக் கவசம் எடுத்துவர வேண்டும்.ஏதேனும் ஒரு அரசு அங்கீகாரம் பெற்ற புகைபடத்தோடு கூடிய அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும். அசல் சான்றிதழ்களை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.இது தொடர்பாக டி.ஐ.ஜி., பாண்டியன், எஸ்.பி., ஸ்ரீநாதா ஆகியோர் கூறுகையில், 'இரண்டாம் நிலைக் காவலர்கள், சிறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர் ஆகிய பதவிகளுக்கான உடல்தகுதி தேர்விற்கு வருவோர் மொபைல் போன் கொண்டு வர தடை செய்யப்பட்டுள்ளது.

தேர்வு நடைபெறும் இடத்திற்கு அருகிலோ அல்லது வேறு இடத்திலோ சிபாரிசு மூலம் பணி வாங்கித் தருவதாக வெளி நபர்கள் கூறினால் யாரும் நம்ப வேண்டாம்.இது முழுக்க முழுக்க தகுதி அடிப்படையில் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணித்து நடைபெறும் தேர்வாகும். தேர்வர்கள் பாதுகாப்பிற்காக மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது.சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், தகுதி தேர்வுக்காகவும் 300 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தகுதியுள்ளோர் பயமின்றி பங்கேற்று திறமை அடிப்படையில் தேர்வில் வெல்லலாம்' என்றனர்.
-நமது நிருபர்-

மூலக்கதை