இது உங்கள் இடம் : புரியாமல் பேசுபவர் அறிவாளி அல்ல!

தினமலர்  தினமலர்
இது உங்கள் இடம் : புரியாமல் பேசுபவர் அறிவாளி அல்ல!

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நான் பேசுவது புரியவில்லை என்றால், பக்கத்தில் இருப்பவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்' என மக்கள் நீதி மய்ய தலைவரும், நடிகருமான கமல் கூறிஉள்ளார். பேசுவது புரிவதில் இரண்டு விஷயங்கள் உள்ளன. பேசுவதே புரியாமல் இருப்பது ஒன்று. அதன் கருத்து புரியாமல் இருப்பது மற்றொன்று. கமலை பொறுத்தவரை இரண்டுமே கோளாறு தான். அவரது தமிழறிவு இளங்கோவடிகள், கவிஞர் கண்ணதாசன் போன்றோரிடம் இருந்து கற்று கொண்டது என்றும் சொல்கிறார்.


கண்ணதாசன் பாடலில் தான் எத்தனை எளிமை இருக்கிறது. பாவம் அவரை ஏன், புரியாமல் பேசும் குட்டைக்குள் துாக்கி போடுகிறார்? ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகங்களை படிக்க அகராதி தேவையில்லை. அத்தனை எளிமையாக இருக்கும். கமல் ஏன் இப்படி பேசுகிறார்? தாம் பேசுவது இன்னதென்று தனக்கே தெரியாமல் பேசுவது தான் புத்திசாலித்தனம் என்று நினைக்கிறாரோ? அவரின் புத்திசாலித்தனத்தை, தனியார் 'டிவி' நிகழ்ச்சி ஒன்றில் நெறியாளரின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய போதே, அனைவரும் புரிந்து கொண்டோம். தெளிவில்லாமல் பேசுவது அறிவாளித்தனமும் அல்ல; அழகும் அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதைவிட கொடுமை, அவர் பேச்சை புரிந்து கொள்ள, 'கோனார் நோட்ஸ்' வாங்குங்கள் என சொல்வது!


கமல் ஒன்றும் திருவள்ளுவர் இல்லை. இவரது வார்த்தைகளுக்கு உரை எழுத பரிமேலழகர் வருவதற்கு! அந்த வள்ளுவரே, 'கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்' எனக் கூறியுள்ளார். அதாவது, 'நம் பேச்சு, கேட்குறவங்களுக்கு பிடிக்கணும்;கேட்காதோர், அதை கேட்க முடியாமல் போய்விட்டதே என வருத்தப்பட வேண்டும்' என்கிறார். இன்னொரு குறளில், 'தன் கருத்தை பிறர் அறியுமாறு தெளிவாக விரித்து கூற தெரியாதவர், கொத்தாக மலர்ந்திருக்கும் மணமில்லாத மலர் போன்றவர்' என்கிறார், திருவள்ளுவர்.இது கமலுக்கு புரிகிறதா?

மூலக்கதை