மோடி, அமித் ஷா மீது பாதிரியார் ஆவேசம்

தினமலர்  தினமலர்
மோடி, அமித் ஷா மீது பாதிரியார் ஆவேசம்

நாகர்கோவில்: பிரதமர் மோடியையும், பாரத மாதாவையும் கொச்சைப்படுத்தி, மதவெறியை தூண்டும் வகையில் பேசியிருக்கும் பாதிரியார், 'நாங்கள் போட்ட பிச்சையால் தான் திமுக வென்றது' என கூறியிருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இணைந்து நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, பாதிரியார் ஒருவர் பேசியதாவது: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு எத்தனை கோவிலுக்கு சென்று கும்பாபிஷேகம் செய்தாலும், சாமி கும்பிட்டாலும், இந்துக்கள் ஒருவர் கூட ஓட்டு போட மாட்டார்கள். மண்டைக்காட்டு அம்மன் பக்தர்களும், இந்துக்களும் உங்களை ஓட்டு போட்டு ஜெயிக்க வைக்கவில்லை. திமுக ஜெயித்தது கிறிஸ்தவ மக்களும், முஸ்லீம்களும் போட்ட பிச்சை. இதை மறந்து விடாதீர்கள்.

உங்கள் திறமையை வைத்து நீங்கள் ஓட்டு வாங்கவில்லை. ஆயர்கள் கண் அசைத்து, கிறிஸ்தவ ஊழியர்கள் வீடு வீடாக சென்று ஓட்டு கேட்பார்கள் என்று அனைத்து எம்.எல்.ஏ.,க்களிடமும் கூறினேன். நாகர்கோவிலில் நடந்த கூட்டம் ஒன்றில், சுரேஷ் ராஜனிடம் (திமுக மாவட்ட செயலாளர் - கன்னியாகுமரி) கிறிஸ்தவர்களின் வீடுகளுக்கு சென்று நாங்கள் ஓட்டு கேட்கிறோம் என்று கூறினேன். அவரோ, இதனால் ஹிந்துக்களின் ஓட்டு கிடைக்காமல் போய்விட்டால் என்ன செய்வது என்று கேட்டார். இதனால் எம்.ஆர்.காந்தி (பா.ஜ.,) நாகர்கோவிலில் ஜெயித்துவிட்டார்.

பூமாதேவியை செருப்பு போட்டு மிதிக்க மாட்டார்களாம். பாரத மாதா மீது செருப்பு பட்டுவிட கூடாதாம். ஆனால் நாம் ஷூ போடுகிறோம். பாரத மாதாவிடம் இருக்கும் அசிங்கம் நம்மிடம் தொற்றிக் கொள்ளக்கூடாது என்பதற்காக ஷூ போட்டு மிதிக்கிறோம். எங்கள் மயிரை கூட நீங்கள் பிடிங்க முடியாது.

கன்னியாகுமரி மாவட்டத்தில், கிறிஸ்தவர்கள் 42 சதவீத மெஜாரிட்டியாக இருந்த நிலையில், தற்போது அது 62 சதவீதத்தை தாண்டி விட்டது. விரைவில் அது 70 சதவீதத்தை தொட்டு விடும். நாங்கள் வளர்ந்து கொண்டு தான் இருப்போம். உங்களால் அதை தடுக்க முடியாது. அதனை எச்சரிக்கையாக ஹிந்து சகோதரர்களுக்கு நாங்கள் சொல்லி கொள்கிறோம். ஆர்.எஸ்.எஸ்., என்றாலும் சரி, பா.ஜ., என்றாலும் சரி எங்களுக்கு கவலை கிடையாது. எங்களை தடுக்க முடியாது.

பிரதமர் மோடியின் கடைசி காலம் மிகவும் பரிதாபமாக இருக்கும். எழுதி வைத்து கொள்ளுங்கள். நாம் நம்பும் கடவுள் உயிரோடு இருக்கிறார் என்றால், அமித் ஷா, மோடியை நாயும், புழுக்களும் சாப்பிடும் நிலையை வரலாறு காண வேண்டும். கண்டிப்பாக காணும். எங்களது சாபம் உங்களை அழிக்கும்; நிர்மூலமாக ஆக்கும். இவ்வாறு அவர் மதவெறியை தூண்டும் வகையில் பேசியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலரும் அவரது இந்த பேச்சுக்கு கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

மூலக்கதை