மனிதர்கள் இடையே பறவைக் காய்ச்சல்? எய்ம்ஸ் விளக்கம்!

தினமலர்  தினமலர்
மனிதர்கள் இடையே பறவைக் காய்ச்சல்? எய்ம்ஸ் விளக்கம்!

புதுடில்லி :''ஒரு மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்கு, பறவைக் காய்ச்சல் பரவுவது என்பது மிகவும் அரிதாகும். எனவே, மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை,'' என, எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

நிமோனியா மற்றும் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஹரியானாவைச் சேர்ந்த 12 வயது சிறுவன், கடந்த 2ம் தேதி, டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவருக்கு, பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன.
அதில், 'இன்புளுவென்சா' வைரசால் அவர் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் எந்த வகை என்பது தெரியாததால், புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு, அவரின் மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டன.

அப்போது செய்யப்பட்ட பரிசோதனைகளில், அந்த சிறுவன், 'எச் - 5 என் - 1' எனப்படும் பறவைக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கிடையே, 12ம் தேதி அந்த சிறுவன் உயிரிழந்தார்.கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில், பறவைக் காய்ச்சலால் ஒரு சிறுவன் உயிரிழந்த சம்பவம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா நேற்று கூறியதாவது:நம் நாட்டில், பறவைக் காய்ச்சலால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ், பறவையில் இருந்து மனிதர்களுக்கு பரவுவது என்பது அரிதான ஒன்று. அதுவும் இந்த வைரஸ், ஒரு மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்கு பரவுவது என்பது அதைவிட அரிதாகும். எனவே, மக்கள் அச்சப்பட
வேண்டியதில்லை.எனினும், கோழிப் பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை