நதி நீர் விஷயத்தில் தமிழக அதிகாரிகளே கோட்டை விடாதீர்கள்!

தினமலர்  தினமலர்
நதி நீர் விஷயத்தில் தமிழக அதிகாரிகளே கோட்டை விடாதீர்கள்!

சென்னை :நதி நீர் விஷயங்களில், இனிமேலும் தமிழக அதிகாரிகள் கோட்டை விட்டுவிடக் கூடாது. கர்நாடக அதிகாரிகள் உஷாராக இருந்து, புள்ளி விபரத்துடன் நம் மாநிலத்திற்கு எதிராக மல்லுக்கட்டுகின்றனர்.

உச்ச நீதிமன்றத்தை நாடி, எந்த வழியிலும் தமிழகம் குறுக்கிடாதபடி, 'ரூட் கிளியர்' செய்கின்றனர். தமிழக அரசு உடனடியாக சுதாரிக்கவில்லை எனில், நெற்களஞ்சியமெல்லாம் பாலைவனமாகும் அபாயம் எழுந்துள்ளது.கர்நாடகாவில் உற்பத்தியாகும் காவிரி, பெண்ணையாறு, பாலாறு பல கி.மீ., பயணித்து, தமிழகத்தில் தான் வங்கக் கடலில் கலக்கின்றன. காவிரி நீர் பங்கீடு தொடர்பாக, தமிழகம் - கர்நாடகா இடையே பிரச்னை நீடித்து வருகிறது. தமிழகத்திற்கு உரிய நீர் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆணைய உத்தரவுகளை கர்நாடக அரசு பின்பற்றுவது கிடையாது.

வெள்ள வடிகாலாக காவிரிகர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பும்போது, அவற்றில் இருந்து உபரி நீர் வெளியேற்றும் வெள்ள வடிகாலாக, தமிழகத்தில் பாயும் காவிரி பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்திற்கு கிடைக்கும் உபரி நீரையும் பறிப்பதற்கு, மேகதாது அணை கட்டுவதற்கான முயற்சியிலும் கர்நாடக அரசு இறங்கியுள்ளது.இதேபோல, பெண்ணையாறு அணை நீரை தடுக்கும் நடவடிக்கையில், சில ஆண்டுகளாக கர்நாடக அரசு ஆர்வம் காட்டி வருகிறது. கொரோனா முதல் அலை ஊரடங்கு காலத்தில், பெண்ணையாற்றின் கிளை ஆறான மார்க்கண்டேய ஆற்றின் குறுக்கே, புதிய அணை கட்டப்பட்டுள்ளது.

இதனால், தமிழகத்தின் கே.ஆர்.பி., அணை, சாத்தனுார் அணை ஆகியவற்றிற்கு நீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்டங்கள் பாதிப்பது உறுதியாகியுள்ளன. தமிழகத்திற்கு கிடைக்கும் காவிரி உபரி நீரை சேமிப்பதற்கு, மேட்டூர் அணை மட்டுமே உள்ளது. இதனால், அதிகப்படியான நீர் கிடைக்கும் காலங்களில், சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

இதை கருத்தில் வைத்து, வெள்ள உபரி நீரை வறட்சி மாவட்டங்களுக்கு திருப்பும் வகையில், காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டத்தை, தமிழக அரசு செயல்படுத்த முடிவெடுத்து உள்ளது.காவிரி - கோதாவரி இணைப்பு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தினால், கிருஷ்ணா நீரும், தமிழகத்தின் இணைப்பு திட்டம் வாயிலாக கிடைக்கும் காவிரி நீரும், வறட்சியான மாவட்டங்களுக்கு கிடைக்கும். இதேபோல, சேலம் மாவட்டத்தில் உள்ள வறட்சியான ஏரிகளுக்கு நீர் கொண்டு செல்லும் வகையில், மேட்டூர் - சரபங்கா நீரேற்று திட்டம் செயலாக்கத்தில் உள்ளது.கதவணை கட்டும் பணிகரூர் மாவட்டம், மாயனுாரில் கதவணை கட்டப்பட்டுள்ளது. இதற்கு நீர் செல்லும் பணிகளை செய்ய வேண்டும். கடலுார் - நாகப்பட்டினம் மாவட்டங்களில், கதவணை கட்டும் பணி நடந்து வருகிறது. கரூர் மாவட்டம், நஞ்சை புகலுார், நேரூர்; நாகை, கடலுார் மாவட்டங்களில், கருப்பூர், மாதிரிவேளூர்; அரியலுார் மாவட்டம், துாத்துார், குளித்தலை, முசிறி ஆகிய இடங்களில் கதவணை கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.இந்த திட்டங்களை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

தமிழகத்தில் இந்த திட்டங்கள் செயல்படுத்த இருப்பது, நம் மாநிலத்தில் உள்ள விவசாயிகள் மட்டுமின்றி, நீர்வளத் துறையில் பலருக்கும் தெரியாது. ஆனால், புள்ளி விபரத்துடன் கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது. இதன் வாயிலாக, நதி நீர் விஷயங்களில், கர்நாடக நீர்வளத் துறை அதிகாரிகள் உஷாராக இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால், மார்க்கண்டேய ஆற்றின் குறுக்கே, கர்நாடகா எப்போது அணை கட்டியது என்ற விபரமே, தமிழக நீர்வளத் துறைக்கு இன்னும் தெரியவில்லை.விபரம் தெரியவில்லைஅரசு உத்தரவுப்படி, கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருந்து பணிபுரிந்ததால், அணை கட்டிய விபரம் தெரியவில்லை என நீர்வளத்துறை அதிகாரிகள், பொதுப்பணித் துறை செயலரிடம் விளக்கம் அளித்துள்ளனர். காவிரி, பெண்ணையாறு விஷயத்தில், தமிழக அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்விக்கும், நீர்வளத் துறை உயர் அதிகாரிகளிடம் உரிய பதில் இல்லை.

இதேநிலை தொடர்ந்தால், தமிழகத்தின் நீராதாரங்கள் முழுமையாக பாதிக்கப்படும். எனவே, பல மாநிலங்களில் பாயும் ஆறுகளில், அண்டை மாநிலங்களால் மேற்கொள்ளப்படும் நீர் தடுப்பு நடவடிக்கைகளை, வரும் காலங்களில் கண்காணித்து, உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். இதற்காக, நீர்வளத் துறையில் தனிப்பிரிவை உருவாக்க, முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மூலக்கதை