கர்நாடக அரசின் கெடுமதி :ஓ.பி.எஸ்., குற்றச்சாட்டு

தினமலர்  தினமலர்
கர்நாடக அரசின் கெடுமதி :ஓ.பி.எஸ்., குற்றச்சாட்டு

சென்னை :காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு உட்பட பல்வேறு திட்டங்களுக்கு தடை கோரி, கர்நாடக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதற்கு, ஓ.பி.எஸ்., கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட, தமிழகம் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், தமிழகத்தில் நிறைவேற்றப்பட உள்ள நீர்ப்பாசன திட்டங்களுக்கு தடை கோரி, கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது, கடும் கண்டனத்திற்குரியது.மேகதாது அணை கட்டப்பட்டால், டெல்டா பகுதி பாலைவனமாகிவிடும் என்பதால், அந்த திட்டத்திற்கு தமிழகம் ஒப்புதல் தரவில்லை.

அதற்காக தங்களுக்கு தொடர்பில்லாத, தமிழகத்தில் நிறைவேற்றப்பட உள்ள நீர்ப்பாசன திட்டங்களுக்கு தடை கேட்டு, கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது நியாயமற்ற செயல்; பொறாமையின்வெளிப்பாடு.உபரி நீர் கடலில் கலந்தாலும் பரவாயில்லை; தமிழக மக்களுக்கு பயன்படக் கூடாது என்ற கர்நாடக அரசின் கெடுமதி எண்ணம் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது.எனவே, கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள மனுவை உடனடியாக தள்ளுபடி செய்ய, தமிழக முதல்வர் தேவையான சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை