சாகுபடி பரப்பு 75 சதவீதமாக உயர்த்த வேண்டும்: முதலவர் ஸ்டாலின்

தினமலர்  தினமலர்
சாகுபடி பரப்பு 75 சதவீதமாக உயர்த்த வேண்டும்: முதலவர் ஸ்டாலின்

சென்னை:''தமிழகத்தில் அடுத்த 10 ஆண்டுகளுக்குள், 60 சதவீதமாக உள்ள சாகுபடி பரப்பை 75 சதவீதமாக உயர்த்த வேண்டும்,'' என, வேளாண் அலுவலர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், நேற்று முன்தினம் தலைமைச் செயலகத்தில் நடந்தது. இதில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

தமிழகத்தில் அடுத்த 10 ஆண்டுகளுக்குள், கூடுதலாக 28.78 லட்சம் ஏக்கரில் பயிரிடச் செய்து, தற்போது 60 சதவீதமாக உள்ள சாகுபடி பரப்பை 75 சதவீதமாக உயர்த்த வேண்டும். இருபோக சாகுபடி நிலங்களை 24.50 லட்சம் ஏக்கரில் இருந்து, 49 லட்சம் ஏக்கராக உயர்த்த வேண்டும்.

கிராம வாரியாக நிலங்களை கணக்கெடுத்து, சாகுபடிக்கு தேவையான அனைத்து பாசன வசதிகளையும் உருவாக்கி தர வேண்டும். விவசாயிகளின் தேவைக்கேற்ப விதைகள், ரசாயன உரங்கள் போன்ற வேளாண் இடுபொருட்களை இருப்பு வைத்து வினியோகம் செய்ய, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உழவர் சந்தைகள் நல்ல முறையில் இயங்கவும், இந்த நிதியாண்டில் புதிய உழவர் சந்தைகளை உருவாக்கவும், செயல்படாத உழவர் சந்தைகளை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமைச் செயலர் இறையன்பு, நிதித் துறை செயலர் கிருஷ்ணன், வேளாண் துறை செயலர் சமயமூர்த்தி மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

மூலக்கதை