இந்தியாவில் கொரோனா காலத்தில் 49 லட்சம் அதிக பலி: ஆய்வில் தகவல்

தினமலர்  தினமலர்
இந்தியாவில் கொரோனா காலத்தில் 49 லட்சம் அதிக பலி: ஆய்வில் தகவல்

புதுடில்லி :'வழக்கமான ஆண்டுகளை விட, கொரோனா வைரஸ் காலத்தில், இந்தியாவில் கூடுதலாக, 49 லட்சம் பேர் உயிரிழந்திருக்கலாம்' என, ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. கொரோனா பலி குறைத்து காட்டப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் ஏற்பட்டு உள்ள பலி குறித்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

கூடுதல் மரணங்கள்


நம் நாட்டின் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்ரமணியன், அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச வளர்ச்சிக்கான அமைப்பைச் சேர்ந்த ஜஸ்டின் சான்ட்பர், ஹார்வர்டு பல்கலையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் அபிஷேக் ஆனந்த் ஆகியோர் இந்த ஆய்வை செய்துள்ளனர்.ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:வழக்கமாக ஒரு ஆண்டில் ஏற்படும் உயிரிழப்பு புள்ளி விபரங்களுடன், கொரோனா காலத்தில் பதிவான உயிரிழப்பு புள்ளி விபரங்களை ஒப்பிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி பார்க்கையில், இந்தியாவில் கொரோனா காலத்தில், அதிகபட்சம் 49 லட்சம் கூடுதல் மரணங்கள் ஏற்பட்டுள்ளன.பல மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட இறப்புகளின் அடிப்படையில் இந்த ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி, 2020 ஜனவரி யில் இருந்து, 2021 ஜூன் வரையிலான காலத்தில், வழக்கமான ஆண்டுகளைவிட, 34 லட்சம் முதல், 49 லட்சம் கூடுதல் மரணங்கள் ஏற்பட்டுள்ளன.

புள்ளி விபரம்



இந்த கூடுதல் உயிர்இழப்புகள் அனைத்துமே கொரோனாவால் ஏற் பட்டவை என்று கூற முடியாது. ஆனால், அரசு புள்ளி விபரத்தில், கொரோனாவால் நான்கு லட்சத்துக்கும் சற்று அதிகமானோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கொரோனா பலி விபரம் குறைவாக காட்டப்பட்டுள்ளது. இது திட்டமிட்டு செய்யப்பட்டதாக கூற முடியாது. அதே நேரத்தில், கொரோனா பலி எண்ணிக்கை முறையாக கணக்கிடப்படவில்லை என கூறலாம்.முதல் அலையை விட, இரண்டாவது அலை மிகத் தீவிரமாக இருந்தது. ஆனால், முதல் அலையில், இந்தியாவில் 1.5 லட்சம் பேர் உயிரிழந்ததாக கணக்குகள் தெரிவிக்கின்றன. அதன்படி பார்க்கையில், இரண்டாவது அலையில், 2.5 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை