பஞ்சாப் காங்.,கில் வலுக்கும் மோதல்: சித்து பக்கம் 62 எம்.எல்.ஏ.,க்கள்

தினமலர்  தினமலர்
பஞ்சாப் காங்.,கில் வலுக்கும் மோதல்: சித்து பக்கம் 62 எம்.எல்.ஏ.,க்கள்

புதுடில்லி :பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, கட்சியில் தன் பலத்தை நிரூபிக்கும் விதமாக, 62 காங்., - எம்.எல்.ஏ.,க்களுடன், அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் நேற்று வழிபாடு நடத்தினார்.

முதல்வர் அமரீந்தர் சிங்குக்கு நெருக்கமான 15 எம்.எல்.ஏ.,க்கள் இதில் பங்கேற்கவில்லை. இந்த சம்பவத்தை அடுத்து, அமரீந்தர் சிங் - சித்து இடையிலான மோதல், உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.


பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கிறது.பஞ்சாப் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த முன்னாள் அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து, முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான ஆட்சி குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்தார். இது, சித்து - அமரீந்தர் இடையே மோதலை ஏற்படுத்தியது.

இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர, காங்., தலைமை இருவரையும் அழைத்து சமரசம் பேசியது. பல்வேறு சுற்று பேச்சுக்கு பின், தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுவதாக முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்தார்.இதையடுத்து, அடுத்த ஆண்டு தேர்தலில் அமரீந்தர் சிங்கையே முதல்வர் வேட்பாளராக தொடர தலைமை முடிவு செய்தது. பஞ்சாப் காங்., தலைவராக நவ்ஜோத் சிங் சித்துவை, காங்., தலைவர் சோனியா சமீபத்தில் நியமித்தார். இது, அமரீந்தர் சிங் ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.பஞ்சாப் காங்., - எம்.எல்.ஏ.,க்களை நேரில் சந்தித்து, சித்து தனக்கு ஆதரவு திரட்டினார்.



கோவில்களில் வழிபாடு



இந்நிலையில், அனைத்து காங்., - எம்.எல்.ஏ.,க்களையும், அமிர்தசரசில் உள்ள தன் வீட்டுக்கு வருமாறு, சித்து நேற்று அழைப்பு விடுத்தார்.மொத்தமுள்ள 77 எம்.எல்.ஏ.,க்களில், 62 பேர் சித்து வீட்டுக்கு நேற்று வந்தனர். அவர்களுடன் தனி பஸ்சில் புறப்பட்ட சித்து, அமிர்தசரசில் உள்ள பொற்கோவில், துர்கைஅம்மன் கோவில் மற்றும் ராம் தீரத் ஸ்தல் ஆகிய இடங்களில் வழிபாடு நடத்தினார்.முதல்வர் அமரீந்தர் சிங்குக்கு ஆதரவான 15 காங்., - எம்.எல்.ஏ.,க்கள் இதில் பங்கேற்கவில்லை.'கட்சிக்குள் தனக்கு உள்ள ஆதரவை முதல்வருக்கு உணர்த்தவே, இந்த கோவில் வழிபாடு நிகழ்ச்சிக்கு சித்து ஏற்பாடு செய்துள்ளார்' என, பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.இந்நிலையில், 'முதல்வர் அமரீந்தர் சிங் குறித்து அவதுாறாக கருத்து தெரிவித்ததற்கு சித்து பகிரங்க மன்னிப்பு கேட்டால் மட்டுமே, அவரை முதல்வர் சந்திப்பார். அதுவரை சித்துவை சந்திக்க மாட்டார்' என, அமரீந்தர் சிங்கின் ஊடக ஆலோசகர் ரவீன் துக்ரால் சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.இதற்கு, சித்து ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, அவர்கள் நேற்று கூறியதாவது:முதல்வரிடம் சித்து எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். இது பொது பிரச்னை அல்ல. மக்களிடம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாத முதல்வர் அமரீந்தர் சிங் தான், மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். வாழ்த்து கூறவில்லைபஞ்சாப் காங்., தலைவராக நவ்ஜோத் சிங் சித்துவை, டில்லி மேலிடம் நியமித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து இதுவரை, சித்துவுக்கு முதல்வர் அமரீந்தர் வாழ்த்து கூறவில்லை. முதலில் ஆணவத்தை அவர் விட்டொழிக்க வேண்டும். மக்கள் யாரை விரும்புகின்றனர் என்பதை முதல்வர் உணர வேண்டும். எனவே, முதல்வரிடம் சித்து மன்னிப்பு கேட்க மாட்டார்.இவ்வாறு அவர்கள் கூறினார்.இதற்கிடையே, சித்து தன் பலத்தை காட்டியுள்ள நிலையில், வரும் சட்ட சபை தேர்தலில் அவர் முதல்வர் வேட்பாளராக மேலிடத்தால் அறி விக்கப்படக் கூடும் எனக் கூறப்படுகிறது.

மூலக்கதை