ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் பலி இல்லை: துவங்கியது அரசியல் வார்த்தை போர்

தினமலர்  தினமலர்
ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் பலி இல்லை: துவங்கியது அரசியல் வார்த்தை போர்

புதுடில்லி:'ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்ததாக, எந்த மாநில அரசும் தெரிவிக்கவில்லை' என, ராஜ்ய சபாவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக, பா.ஜ., மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே வார்த்தை போர் துவங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை, இந்தாண்டு மார்ச், ஏப்., மாதங்களில் தீவிரமடைந்தது. அப்போது நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஆக்சிஜன், மருந்து, மருத்துவமனைகளில் படுக்கைக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

விமர்சனம்

இந்நிலையில், ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றுக்கு நேற்று முன்தினம் அளித்த பதிவில், 'கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின்போது ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்பு ஏற்பட்டதாக, எந்த மாநில, யூனியன் பிரதேச அரசும் தெரிவிக்கவில்லை' என, மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்திருந்தார்.

இது இப்போது கடும் விவாதத்தை துவக்கியுள்ளது. காங்., ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள், மத்திய அரசுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்துள்ளன.காங்., பொதுச் செயலர் பிரியங்கா, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் எந்த மரணமும் ஏற்படவில்லை. ஆனால், ஆக்சிஜன் ஏற்றுமதியை அரசு 700 சதவீதம் உயர்த்தியது;ஆக்சிஜன் வினியோகத்துக்கு தேவையான போக்குவரத்து வசதிகள் செய்யாதது; நிபுணர் குழுவின் அறிவுரையை கேட்காதது; தேவையான ஆக்சிஜனுக்கு ஏற்பாடு செய்யாதது போன்ற காரணங்களால் இறந்திருக்கலாம்.இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.

'ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் யாரும் உயிரிழக்கவில்லை என்றால், பல மருத்துவமனைகள் நீதிமன்றங்களை அவசரமாக அணுகியது ஏன். ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்து தணிக்கை செய்ய குழு அமைக்க முயன்றோம். ஆனால், மத்திய அரசு தடுத்துவிட்டது' என, டில்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறியுள்ளார்.

பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய பிரதேச சுகாதார அமைச்சர் விஷ்வாஸ் சாரங்க், 'எந்த மாநில அரசும் ஆக்சிஜனால் உயிரிழப்பு ஏற்பட்டதாக மத்திய அரசுக்கு தெரிவிக்கவில்லை.'அதைத் தான், அமைச்சர் கூறியுள்ளார். தமிழகத்தில் ஆளும் தி.மு.க.,வைச் சேர்ந்த, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும், ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் யாரும் உயிரிழக்கவில்லை என்று கூறியுள்ளார்' என, குறிப்பிட்டுள்ளார்.

பா.ஜ., செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியுள்ளதாவது:சுகாதாரம் என்பது மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் அளித்த தகவல்களின் அடிப்படையில் தான், மத்திய அரசு பதில் அளித்துள்ளது. 'ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை' என, மத்திய அரசுக்கு தெரிவித்து விட்டு, தற்போது மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் விமர்சனம் வைக்கின்றன. இது முழுக்க முழுக்க அரசியல்.

உள்நோக்கம்



சமூக வலைதளங்களில் தொடர்ந்து பொய்களை பதிவிட்டு வரும், காங்., முன்னாள் தலைவர் ராகுல், அவருடைய கட்சி ஆளும் மாநில முதல்வர்களிடம், ஏன் பொய் சொன்னீர்கள் என்று கேட்க வேண்டும்.டில்லி ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையில் 21 பேர் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் இறந்ததாக கூறப்பட்டது.

உயர் நீதிமன்ற விசாரணையில், 'ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் யாரும் இறக்கவில்லை' என, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு கூறியது. ஆனால், தற்போது விமர்சிக்கிறது.மஹாராஷ்டிரா அரசும், ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் எந்த மரணமும் ஏற்படவில்லை என, நீதிமன்றத்தில் கூறியுள்ளது. சத்தீஸ்கர் என, பல மாநிலங்களும் நீதிமன்றங்களில் இதை கூறியுள்ளன.எந்த மாநில அரசின் கைகளையும் நாங்கள் கட்டி வைக்கவில்லையே. மாநில அரசுகள் கூறியதை, மத்திய அரசு சொன்னால், அதற்கு விமர்சிக்கின்றனர். அனைத்திலும் அரசியல் செய்வது மட்டுமே அவர்களுடைய நோக்கமாக உள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை