ஒலிம்பிக் மகளிர் கால்பந்து உலக சாம்பியன் அமெரிக்கா ஸ்வீடனிடம் அதிர்ச்சி தோல்வி

தினகரன்  தினகரன்
ஒலிம்பிக் மகளிர் கால்பந்து உலக சாம்பியன் அமெரிக்கா ஸ்வீடனிடம் அதிர்ச்சி தோல்வி

டோக்கியோ: ஒலிம்பிக் மகளிர் கால்பந்து போட்டியின் லீக் ஆட்டத்தில் உலக சாம்பியன் அமெரிக்கா 0-3 என்ற கோல் கணக்கில்  ஸ்வீடனிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது. டோக்கியோ ஒலிம்பிக்  போட்டி  நாளை தொடங்க உள்ள நிலையில் பேஸ்பால், கால்பந்து போட்டிகள் நேற்றே தொடங்கின. ஈ பிரிவின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து - சிலி மகளிர் அணிகள் மோதின. இப்போட்டியில் இங்கிலாந்து 2-0 என்ற கோல் கணக்கில்  வென்றது. தொடர்ந்து 2வது ஆட்டத்தில் எப் பிரிவில் உள்ள பிரேசில் அணி 5-0 என்ற கணக்கில் சீனாவை பந்தாடியது. அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய  மற்றொரு ஆட்டத்தில் ஜி பிரிவில் உள்ள பிபா மகளிர் உலக கோப்பை நடப்பு சாம்பியன் அமெரிக்கா - ஸ்வீடன் அணிகள் மோதின. ஸ்வீடன் அணியின் ஸ்டினா பிளாக்ஸ்டெனியூஸ் ஆட்டத்தின் 25வது நிமிடத்திலேயே முதல் கோல் அடிக்க, இடைவேளையின்போது 1-0 என்ற கணக்கில் அந்த அணி முன்னிலை வகித்தது. 2வது பாதியிலும் அமெரிக்காவின் கோல் அடிக்கும் முயற்சிகள் பலனளிக்கவில்லை. அதே சமயம்  54வது நிமிடத்தில் ஸ்டினா தனது 2வது கோலை அடித்தார். பதிலி ஆட்டக்காரர் லினா ஹர்டிக் தனது பங்குக்கு ஆட்டத்தின் 72வது நிமிடத்தில் கோல் அடிக்க, ஸ்வீடன் 3-0 என்ற கோல் கணக்கில் உலக சாம்பியன் அமெரிக்காவை வீழ்த்தியது.* ஜப்பானுக்கு முதல் வெற்றி...பேஸ்பால் (சாப்ட் பால்) போட்டியில் முதலில் நடந்த லீக் ஆட்டத்தில் ஜப்பான் 8-1 என்ற ரன் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்த ஒலிம்பிக் போட்டியில் முதல் வெற்றியை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற ஆட்டங்களில்  அமெரிக்கா 2-0 என்ற ரன் கணக்கில் இத்தாலியையும்,  கனடா 4-0 என்ற ரன் கணக்கி மெக்சிகோவையும் வீழ்த்தின.

மூலக்கதை