பக்...பக்...தீபக் திருப்பம்... இந்தியா விருப்பம்: கடைசி ஓவரில் 'திரில்' வெற்றி

தினமலர்  தினமலர்
பக்...பக்...தீபக் திருப்பம்... இந்தியா விருப்பம்: கடைசி ஓவரில் திரில் வெற்றி

கொழும்பு: பரபரப்பான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 8வது பேட்ஸ்மேனாக களமிறங்கிய தீபக் சகார் அரைசதம் கடந்து திருப்பம் ஏற்படுத்தினார். கடைசி ஓவரில் 'திரில்' வெற்றி தேடித்தந்து இந்திய ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றினார்.


இலங்கை சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வென்ற இந்தியா 1-0 என தொடரில் முன்னிலையில் இருந்தது. இரு அணிகள் மோதிய இரண்டாவது போட்டி நேற்று கொழும்புவில் நடந்தது. 'டாஸ்' வென்ற இலங்கை அணி கேப்டன் ஷனாகா பேட்டிங் தேர்வு செய்தார்.

சகால் 'இரண்டு'


இலங்கை அணிக்கு அவிஷ்கா, மினோத் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 77 ரன்கள் சேர்த்த போது, தனது நான்காவது ஓவரை வீசிய சகால் திருப்பம் தந்தார். இதன் இரண்டாவது பந்தில் மினோத் (36), 3வது பந்தில் பனுகாவை 'டக்' அவுட்டாக்கினார்.


அடுத்து அவிஷ்கா, தனஞ்செயா டி சில்வா இணைந்தனர். அவிஷ்கா, ஒருநாள் அரங்கில் 4வது அரைசதம் எட்டினார். இவரை புவனேஷ்வர் குமார் அவுட்டாக்கி அனுப்பி வைத்தார். மறுபக்கம் தனஞ்செயா டி சில்வா 32 ரன்கள் எடுத்த நிலையில், தீபக் சகார் 'வேகத்தில்' வெளியேறினார்.

அசலங்கா ரன்குவிப்பு


ஷனாகா (16), ஹசரங்கா (8) ஏமாற்றினர். அசலங்கா ஒருநாள் அரங்கில் முதன் முறையாக அரைசதம் கடந்தார். இவர் 65 ரன்கள் எடுத்த போது, புவனேஷ்வரிடம் சிக்கினார். சமீரா (2), சந்தகன் (0) கைவிட்ட போதும், கடைசி நேரத்தில் கருணாரத்னே 33 பந்தில் 44 ரன்கள் சேர்த்தார். இலங்கை அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 275 ரன்கள் எடுத்தது.

சூர்யகுமார் நம்பிக்கை


இந்திய அணிக்கு பிரித்வி ஷா, கேப்டன் ஷிகர் தவான் ஜோடி சுமார் துவக்கம் கொடுத்தது. பிரித்வி (12), அடுத்து வந்த இஷான் கிஷான் (1) என இளம் வீரர்கள் இருவரும் விரைவில் வெளியேறினர். இந்நிலையில், ஹசரங்கா சுழலில் தவான் (29) அவுட்டாக, மணிஷ் பாண்டே (37) ரன் அவுட்டானார். ஹர்திக் பாண்ட்யா 'டக்' அவுட்டானார். சூர்யகுமார் 53, குர்னால் பாண்ட்யா 35 ரன் எடுத்தனர்.


'திரில்' வெற்றி


இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்த போது, வெற்றிக்கு 83 ரன்கள் தேவைப்பட்டன. புவனேஷ்வர் குமார், தீபக் சகார் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கடைசி கட்டத்தில் 'டென்ஷன்' ஏற்பட்ட போதும், பதட்டப்படாமல் ஆடிய தீபக் சகார், ஒருநாள் அரங்கில் முதல் அரைசதம் அடித்து நம்பிக்கை தந்தார்.

மறுபக்கம் புவனேஷ்வர் துாணாக நின்று கைகொடுத்தார். கடைசியில் சகார் ஒரு சூப்பர் பவுண்டரி அடிக்க, இந்திய அணி 49.1 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்து, 3 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது. தீபக் சகார் (69), புவனேஷ்வர் குமார் (19) அவுட்டாகாமல் இருந்தனர். ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் தொடரை 2-0 என கைப்பற்றியது.

9


இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது வெற்றியை அடுத்து இந்திய அணி ஒருநாள் தொடரை 2-0 என வென்றது. தவிர 2007 முதல் இந்த அணிக்கு எதிராக மூன்று வித கிரிக்கெட்டிலும் இந்தியா வெற்றி 9 வது தொடர் வெற்றி இது. விண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியா தொடர்ந்து 10 தொடர்களில் கோப்பை வென்றது முதலிடத்தில் உள்ளது.

* சர்வதேச அளவில் 1996 முதல் 2020 வரை ஜிம்பாப்வேக்கு எதிராக தொடர்ந்து 11 தொடர்களில் வென்ற பாகிஸ்தான் அணி 'நம்பர்-1' இடத்தில் உள்ளது.

மூலக்கதை