டோக்கியோ ஒலிம்பிக்சில் முதல் விளையாட்டாக கால்பந்து ஆட்டங்கள் இன்று தொடக்கம்

தினகரன்  தினகரன்
டோக்கியோ ஒலிம்பிக்சில் முதல் விளையாட்டாக கால்பந்து ஆட்டங்கள் இன்று தொடக்கம்

டோக்கியோ: ஒலிம்பிக் போட்டி நாளை மறுநாள் முறைப்படி தொடங்க உள்ளநிலையில், கால்பந்து மற்றும் பேஸ்பால் ஆட்டங்கள் மட்டும் 2 நாட்கள் முன்னதாக இன்று தொடங்குகின்றன. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி நாளை மறுநாள் ஜப்பான் தலைநகர டோக்கியோவில் தொடங்குகிறது. ஆனால் மகளிர் கால்பந்து மற்றும் பேஸ்பால் ஆட்டங்கள் இன்றே தொடங்கி நடைபெறுகின்றன. ஆண்கள் கால்பந்து போட்டிகள் நாளை தொடங்க உள்ளன. மகளிர் கால்பந்து போட்டியில்  விளையாட  இங்கிலாந்து, சிலி,  சீனா, பிரேசில், ஸ்வீடன், உலக சாம்பியன் அமெரிக்கா,  ஜப்பான், கனடா, ஜாம்பியா, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து என 12 அணிகள் தகுதி பெற்றுள்ளன.தலா 4 அணிகள் கொண்ட 3 பிரிவுகளில் (இ, எப், ஜி) நடைபெறும் லீக் ஆட்டங்களின் முடிவில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள்,  3வது இடம் பிடிக்கும்  3 அணிகளில் புள்ளி, கோல் அடிப்படையில் மேம்பட்ட 2 அணிகள் என 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். அதேபோல் ஆடவர் பிரிவில் விளையாட   உலக சாம்பியன் பிரான்ஸ்,  அர்ஜென்டினா, பிரேசில், ஜெர்மனி, ஸ்பெயின், மெக்சிகோ, ஜப்பான், தென் ஆப்ரிக்கா, ஹோண்டுராஸ், எகிப்து,  நியூசிலாந்து, ருமேனியா, சவுதி அரேபியா, கொரிய குடியரசு என 16 அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்த அணிகள் தலா 4 அணிகள் கொண்ட ஏ, பி, சி, டி என 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் தலா 2 அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். இன்று தொடங்கும் மகளிர் இ பிரிவு  முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து - சிலி அணிகள் களம் காண்கின்றன. அதேபோல் நாளை தொடங்கும் ஆடவர் பிரிவு முதல் ஆட்டத்தில் எகிப்து - ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன. மகளிர் காலிறுதி ஆட்டங்கள் ஜூலை 30ம் தேதியும், அரையிறுதி  ஆட்டங்கள் ஆக.1ம் தேதியும்,  வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டம் ஆக.5ம் தேதியும்,  இறுதி ஆட்டம் ஆக.6ம் தேதியும் நடக்கும். அதே போல் ஆடவர் காலிறுதி ஆட்டங்கள் ஜூலை 31ம் தேதியும், அரையிறுதி  ஆட்டங்கள்  ஆக.3ம் தேதியும்,  வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டம் ஆக.6ம் தேதியும்,  இறுதி  ஆட்டம் ஆக.7ம் தேதியும் நடக்கும்.

மூலக்கதை