5 ஆயிரம் தலிபானை விடுவித்து பெரிய தவறு செய்து விட்டேன்:' ஆப்கான் அதிபர் வேதனை

தினகரன்  தினகரன்
5 ஆயிரம் தலிபானை விடுவித்து பெரிய தவறு செய்து விட்டேன்: ஆப்கான் அதிபர் வேதனை

காபூல்: ‘சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 5 ஆயிரம் தலிபான் தீவிரவாதிகளை விடுதலை செய்தது மிகப்பெரிய தவறான முடிவாகும்,’ என்று ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் அரசுக்கு ஆதரவாக இருந்த அமெரிக்க படைகள் வெளியேறி வருவதால், தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. அரசு கட்டுப்பாட்டில் இருந்த பெரும்பாலான பகுதிகளை அவர்கள் பிடித்து விட்டனர். இந்நிலையில், தலைநகர் காபூலில் நேற்று பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதை முன்னிட்டு, அதிபர் அஷ்ரப் கனி நாட்டு மக்களிடையே உரையாற்றினார்,  அதில் பேசிய அவர், ‘‘தலிபான்களுக்கு அமைதிக்கான விருப்பமும், நோக்கமும் இல்லை. தலிபான்களுடன் அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியபோது சிறையில் இருந்த 5 ஆயிரம் தலிபான்களை விடுவித்து மிகப்பெரிய தவறை செய்து விட்டேன். அது அரசின் மிகப்பெரிய தவறான முடிவாகும். இதுதான் அவர்களை வலிமையாக்கி உள்ளது. ஆனால், இன்று வரை அவர்கள் அர்த்தமுள்ள எந்த பேச்சுவார்த்தை யிலும் ஈடுபாடு காட்டவில்லை,” என்றார். அதிபர் மாளிகை மீது ராக்கெட் தாக்குதல்பக்ரீத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு அதிபர் அஷ்ரப் கனி உரையாற்றுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பாக, காபூலில் உள்ள அதிபர் மாளிகை மீது தலிபானகள்  3 ராக்கெட்டுகளை  ஏவி தாக்குதல் நடத்தினர். அதிர்ஷ்டவசமாக, இவை அதிபர் மாளிகை வளாக  மைதானத்தில் விழுந்து வெடித்தன. இதனால் ஏற்பட்ட சேதம் பற்றி விவரம்  வெளியிடப்படவில்லை. ராணுவ தளபதி இந்தியா வருகைஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தாக்குதல் தீவிரமாகி உள்ள நிலையில், இந்நாட்டின் ராணுவ தலைமை ஜெனரல் வாலி முகமது 3 நாள் பயணமாக வரும் 27ம் தேதி இந்தியா வருகிறார். 30ம் தேதி வரையில் இந்தியாவில் இருக்கும் அவர்  ராணுவ தளபதி நாரவனே, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோரை சந்தித்து பேசுகிறார். அப்போது, ஆப்கான் - இந்தியா ராணுவ உறவை வலுப்படுத்துவது குறித்து அவர் பேசுவார் என்றும், தலிபான்களை எதிர்க்க உதவி கேட்பார் என்றும் தெரிகிறது.

மூலக்கதை