சீனாவில் ஒரேநாளில் கொட்டி தீர்த்த கனமழை; வெள்ளத்தில் மிதந்த கார்கள்

தினமலர்  தினமலர்
சீனாவில் ஒரேநாளில் கொட்டி தீர்த்த கனமழை; வெள்ளத்தில் மிதந்த கார்கள்

பீஜிங்: சீனாவில் ஒரேநாளில் அதிகனமழை பெய்ததால் பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின. பல பகுதிகளில் நூற்றுக்கணக்கான கார்கள் வெள்ளத்தில் மிதந்தன.

சீனாவின் பல்வேறு மாகாணங்களில் கடந்த ஒரு வாரமாக அதி தீவிர கனமழை பெய்து வருகிறது. தெற்கு சீனாவில் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. முக்கியமான ஹெனான் என்ற மாகாணத்தில் அதி தீவிர கனமழை பெய்து வருகிறது. அங்குள்ள செங்சாவ் பகுதியில் மாலை 4 முதல் 5 மணி வரையிலான ஒரே மணிநேரத்தில் 201.9 மி.மீ., மழை பெய்துள்ளது. எதிர்பார்க்காத காலநிலை மாற்றத்தால் தான் இவ்வளவு மழை பெய்துள்ளதாக சீனாவின் வானிலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அங்கு ஆண்டு சராசரி மழை அளவு 640.8 மி.மீ., ஆக உள்ள நிலையில், செங்சாவ் பகுதியில் ஒரேநாளில் மட்டும் 457.5 மி.மீ., மழைப்பதிவாகியுள்ளது.

மொத்தமாக பெய்த கனமழையால் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் வெள்ளத்தில் மூழ்கியிருந்தது. நகரமே மொத்தமாக வெள்ளத்தில் மூழ்கியதால், ஒரு லட்சம் பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர். 1000க்கும் அதிகமான வீடுகள் நீரில் மூழ்கின. வெள்ளத்தில் இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர். சில இடங்களில் நூற்றுக்கணக்கான கார்கள் வெள்ளித்தில் அடித்து செல்லப்பட்டு மிதக்கும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது. அதேபோல் அங்குள்ள சுரங்க ரயில்பாதையிலும் வெள்ளநீர் புகுந்ததால் பயணிகள் வெள்ளத்தில் மூழ்கியவாறு ரயிலில் நிற்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளது. சீனாவில் ஏற்பட்ட மிகப்பெரிய பேரிடர்களில் ஒன்றாக இந்த ஹெனான் கனமழை வெள்ளம் பார்க்கப்படுகிறது.


மூலக்கதை