பசுமை ஹைட்ரஜன் ஆலை முதலில் அமைக்கிறது ஐ.ஓ.சி.,

தினமலர்  தினமலர்
பசுமை ஹைட்ரஜன் ஆலை முதலில் அமைக்கிறது ஐ.ஓ.சி.,

புதுடில்லி:இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான, ஐ.ஓ.சி., எனும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், நாட்டின் முதல், ‘பசுமை ஹைட்ரஜன்’ ஆலையை, அதன் மதுரா சுத்திகரிப்பு நிலையத்தில் அமைக்கிறது.

புதை படிவ எரிபொருட்களுக்கு பதிலாக, புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் ஹைட்ரஜன் எரிபொருள், ‘பசுமை ஹைட்ரஜன்’ என அழைக்கப் படுகிறது. எண்ணெய் மற்றும் துாய்மையான எரிசக்தி ஆகியவற்றுக்கான தேவை அதிகரித்து வருவதை அடுத்து, எதிர்கால நோக்கில் இந்த ஆலை அமைக்கப்பட உள்ளது.

இது குறித்து இந்நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா கூறியதாவது:இது, நாட்டின் முதல் பசுமை ஹைட்ரஜன் ஆலையாக இருக்கும். எதிர்கால எரிபொருள் தேவையில் ஹைட்ரஜனின் பங்கு அதிகரிக்கும்.எதிர்காலத்தின் எரிபொருளாக ஹைட்ரஜன் இருக்கும் எனக் கருதுகிறோம். ஐ.ஓ.சி., நிறுவனம் மேலும் பல ஹைட்ரஜன் உற்பத்தி ஆலைகளை அமைக்க இருக்கிறது.
இது ஒருபுறமிருக்க, எங்களுடைய தற்போதைய சுத்திகரிப்பு திறனை, 2.5 கோடி டன் அளவுக்கு கூடுதலாக அதிகரிக்க உள்ளோம். சி.பி.சி.எல்., நிறுவனத்துடன் சேர்ந்து, தற்போது 8.05 கோடி டன் அளவுக்கு சுத்திகரித்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை