ஒற்றைச்சாளர முறை விண்ணப்பம் தேவையற்ற விபரம் கேட்கக் கூடாது

தினமலர்  தினமலர்
ஒற்றைச்சாளர முறை விண்ணப்பம் தேவையற்ற விபரம் கேட்கக் கூடாது

சென்னை:புதிதாக தொழில் துவங்க, ஒற்றைச்சாளர முறையில் விண்ணப்பிக்கும் புதிய தொழில் முனைவோரிடம், தேவையற்ற விபரங்கள் மற்றும் ஆவணங்கள் கேட்கக் கூடாது என, தொழில் வணிக இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.

இது குறித்து தொழில்துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில் தொழில் புரிதலுக்கான நடைமுறைகளை எளிதாக்கவும், உள்நாடு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும், தமிழ்நாடு வணிக நடைமுறைகள் எளிதாக்கும் சட்டம் 2018ல் கொண்டு வரப்பட்டது.

இதன்படி, அனுமதி மற்றும் உரிமங்களை எளிதாகவும், வெளிப்படையான முறையில், காலக்கெடுவுக்குள் வழங்க வேண்டும்.சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடம் இருந்து, 1,314 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.இதில், 912 விண்ணப்பங்களில் மட்டுமே, குறித்த காலக்கெடுவுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் மீது, உரிய அவகாசத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு வழங்கினால், இரண்டு மாதங்களுக்குள், அனைத்து சான்றிதழ்களையும் பெற்று, தொழில் துவங்க முடியும்.தேவையற்ற விபரங்கள் மற்றும் ஆவணங்கள் கேட்பதையும், உரிய காரணங்களின்றி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதையும், காலக் கெடுவைத் தாண்டி, உரிய நடவடிக்கை எடுக்க தாமதிப்பதையும் தவிர்க்க முடியும்.

முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு, இணக்கமான தொழில் நடைமுறைச் சூழலை உருவாக்குமாறு, தொழில் வணிக இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

மூலக்கதை