கொரோனா பரவல் மிகவும் தீவிரமானால் கடைசி நேரத்தில் கூட ஒலிம்பிக் போட்டிகள் ரத்தாக வாய்ப்பு உள்ளதாக தகவல்

தினகரன்  தினகரன்
கொரோனா பரவல் மிகவும் தீவிரமானால் கடைசி நேரத்தில் கூட ஒலிம்பிக் போட்டிகள் ரத்தாக வாய்ப்பு உள்ளதாக தகவல்

டோக்கியோ: கொரோனா பரவல் மிகவும் தீவிரமானால் கடைசி நேரத்தில் கூட ஒலிம்பிக் போட்டிகள் ரத்தாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 23ஆம் தேதி ஒலிம்பிக் போட்டி கோலாகலமாகத் தொடங்குகிறது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டி கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இன்னும் 3 நாட்களில் தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்காக ஒவ்வொரு நாட்டு வீரர், வீராங்கனைகள், அதிகாரிகள் அடங்கிய அணி ஜப்பானை நோக்கி படையெடுத்த வண்ணம் இருக்கிறது. போட்டியில் பங்கேற்பவர்கள் தங்குவதற்கு நவீன வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் கிராமம் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. கொரோனா பரிசோதனைக்கு பிறகு ஒவ்வொரு அணியினரும் ஒலிம்பிக் கிராமத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும் அறையில் தங்கி வருகின்றனர். வெள்ளிக்கிழமை டோக்கியோவில் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டி குழுவின் தலைவரான டோஷிரோ முடோ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; அதிகரித்து வரும் கொரோனா தொற்று, அதை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விவாதித்து வருகிறோம். கொரோனா தோற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்குமா என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாது. கொரோனா பரவல் சூழ்நிலையை பொறுத்து ஒலிம்பிக்ஸ் போட்டி அமைப்பாளர்கள் மீண்டும் கூடி விவாதிப்பர். கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பார்வையாளர்கள் இல்லாமல் போட்டியை நடத்த ஜப்பான் திட்டமிட்டுள்ளது எனவும் கூறினார்.

மூலக்கதை