‘பெகாசஸ்’ ஒட்டுக் கேட்பு விவகாரத்தால் நாடாளுமன்றம் 2வது நாளாக முடங்கியது: எதிர்கட்சி தலைவர்கள் முக்கிய ஆலோசனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
‘பெகாசஸ்’ ஒட்டுக் கேட்பு விவகாரத்தால் நாடாளுமன்றம் 2வது நாளாக முடங்கியது: எதிர்கட்சி தலைவர்கள் முக்கிய ஆலோசனை

புதுடெல்லி: இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்தின் ‘பெகாசஸ்’ உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், ஒன்றிய அமைச்சர்கள், முன்னாள் தேர்தல் ஆணையர், நீதிபதிகள், எதிர்க்கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட 300 பேரின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது. சர்வதேச ஊடக நிறுவனங்களான பர்மிடன் ஸ்டோரிஸ், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து, இந்த புலனாய்வு தகவல்களை வெளியிட்டுள்ளன.

இந்த விவகாரம் நேற்றைய நாடாளுமன்றம் தொடங்கிய முதல் நாள் கூட்டத்தொடரில் பெரும் புயலைக் கிளப்பியது.

இந்நிலையில் இன்று நாடாளுமன்ற 2ம் நாள் கூட்டத் தொடங்குவதற்கு முன்னதாக, ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங், ‘பெகாசஸ்’ உளவு மென்பொருள் விவகாரம் தொடர்பான ஊடக அறிக்கை குறித்து மாநிலங்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் (ஜீரோ ஹவர்) விவாதிக்க நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

அதேநேரம் காங்கிரஸ் மூத்த எம்பி கே. சி. வேணுகோபால், மாநிலங்களவையில் விதி எண்: 267ன் கீழ் அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்து ‘பெகாசஸ்’ விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் எனக்கூறி நோட்டீஸ் கொடுத்தார்.   அதேபோல், சிபிஐ (எம்) எம்பி எலமாரம் கரீம், மாநிலங்களவையில் பிரபலங்களை ஒன்றிய அரசு உளவு பார்த்ததாகக் கூறப்படுவது குறித்து விவாதிக்க வேண்டும் எனக்கூறி நோட்டீஸ் தந்தார்.

காங்கிரஸ் எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், கவுரவ் கோகாய் ஆகியோர் மக்களவையில் ‘பெகாசஸ்’ குறித்து ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கினர்.

இன்று காலை அவை நடவடிக்கைகள் தொடங்குவதற்கு முன், பிரதமர் மோடி தலைமையில் பாஜக எம்பிக்கள் கூட்டமும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டமும் தனித்தனியாக நடந்தன. தொடர்ந்து முற்பகல் 11 மணிக்கு மக்களவை கூடியதும், அவை நடவடிக்கைகள் சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் தொடங்கியது.

அப்போது  ‘பெகாசஸ்’ விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகளின் கூச்சல் குழப்பத்தால், அவை நடவடிக்கைகள் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

அதேபோல், மாநிலங்களவையும் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதனால், அவை நடவடிக்கைகள் 2வது நாளாக முடங்கியது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை, தடுப்பூசிகள் குறித்து பிரதமர் மோடி அவையில் பேசும்போது, அதில் பங்கேற்பதா? வேண்டாமா? என்பது குறித்து இன்று மதியம் 2 மணிக்கு காங்கிரஸ், திமுக, திரிணாமுல், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்துக்கின்றனர்.

.

மூலக்கதை