3வது டி20 போட்டியில் இங்கிலாந்து - பாக். இன்று பலப்பரீட்சை

தினகரன்  தினகரன்
3வது டி20 போட்டியில் இங்கிலாந்து  பாக். இன்று பலப்பரீட்சை

மான்செஸ்டர்: இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி, ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் இன்று இரவு நடைபெறுகிறது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, முதலில் விளையாடிய ஒருநாள் தொடரில் 0-3 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் படுதோல்வியை சந்தித்தது. அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. முதல் டி20ல் பாகிஸ்தான் அணி 31 ரன் வித்தியாசத்தில் வென்று முன்னிலை வகிக்க, லீட்ஸ் ஹெடிங்லி மைதானத்தில் நடந்த 2வது டி20 போட்டியில் இங்கிலாந்து 45 ரன் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்தது.அந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீசிய நிலையில், இங்கிலாந்து 19.5 ஓவரில் 200 ரன் குவித்து ஆல் அவுட்டானது. கேப்டன் பட்லர் 59 ரன் (39 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்), மொயீன் அலி 36 ரன் (16 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்), லிவிங்ஸ்டோன் 38 ரன் (39 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினர். பாக். பந்துவீச்சில் ஹஸ்னைன் 3, இமத் வாசிம், ஹரிஸ் ராவுப் தலா 2, ஷாகீன் அப்ரிடி, ஷதாப் கான் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன் மட்டுமே எடுத்து 45 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ரிஸ்வான் அதிகபட்சமாக 37 ரன் எடுத்தார். கேப்டன் பாபர் 22, இமத் வாசிம் 20 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் எடுக்கத் தவறினர். ஷதாப் கான் 36 ரன் (22 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்), ஹஸ்னைன் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் சாகிப் மகமூத் 3, ரஷித், மொயீன் தலா 2, டாம் கரன், பார்கின்சன் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். மொயீன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, தொடரை கைப்பற்றப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் 3வது டி20 மான்செஸ்டரில் இன்று நடக்கிறது.

மூலக்கதை