சர்வதேச அளவில் கிளம்பிய ‘பெகாசஸ்’ செயலி விவகாரம்: 300 இந்தியர்களின் தொலைபேசி ஒட்டுக்கேட்பு..! ஒன்றிய அரசு திட்டவட்ட மறுப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
சர்வதேச அளவில் கிளம்பிய ‘பெகாசஸ்’ செயலி விவகாரம்: 300 இந்தியர்களின் தொலைபேசி ஒட்டுக்கேட்பு..! ஒன்றிய அரசு திட்டவட்ட மறுப்பு

புதுடெல்லி:mஒன்றிய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட 300 இந்தியர்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக வெளியான தகவலால், எதிர்கட்சிகள் ஒன்றிய அரசை குற்றம்சாட்டி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரபல ‘ஸ்பைவேர்’ நிறுவனமான என்எஸ்ஓ, கடந்த 2019ல் அறிமுகப்படுத்திய ‘பெகாசஸ்’ ஸ்பைவேர் செயலியை உளவு பணிகளுக்காகவே உருவாக்கியது.

இந்த ஒட்டுக்கேட்பு பெகாசஸ் செயலியின் மூலம் உளவு அமைப்புகளால் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய அனைத்து இயங்கு தளங்களிலும் ஊடுருவி, சம்பந்தப்பட்டவர்களின் தரவுகளைத் திருடி அவர்களின் தொலைபேசிகளைக் கட்டுப்படுத்தி, கண்காணிக்க முடியும். இந்த செயலி சந்தைக்கு வந்த சில நாட்களிலேயே பெரும் வரவேற்பு கிடைத்தது.

கடந்த 2019ம் ஆண்டு இந்த செயலியை பயன்படுத்தி பயனர்களின் வாட்ஸ்-அப் தரவுகள் திருடப்படுவதாக வாட்ஸ்-அப் நிறுவனம் இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்தது. ஆனாலும், இந்த செயலியின் பயன்பாடு அதிகரித்தவாறே இருந்தது.



உளவு அமைப்புகளின் பயன்பாட்டுக்காக இந்த செயலி உருவாக்கப்பட்டிருந்தாலும், அரசுகள் மற்றுமின்றி தனி நபர்களும் இந்த செயலியை பயன்படுத்தி பலரது தகவல்களை திருடியும், தொலைபேசியை ஒட்டுக் கேட்டும் வந்தனர். அந்த பட்டியலில், ஆளுங்கட்சியால் பாதிக்கப்பட்டவர்கள், போராட்டக்காரர்கள், மாற்று அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், தூதரக அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரின் தொலைப்பேசி உரையாடலை ஒட்டுக் கேட்கவும், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றவும் இந்த ‘பெகாசஸ்’ செயலியைப் பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

மிகவும் அதிதொழில்நுட்பம் வாய்ந்த செல்போன்களை கூட, இந்த செயலி மூலம் ஹேக் செய்து விட முடியும் என்று கூறப்படுகிறது. பல நாடுகளில் ‘பெகாசஸ்’ செயலி மூலம் தகவல் திருட்டு, தொலைபேசி ஒட்டுக்கேட்புக்கு இந்தியாவில் உள்ள வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் என 300க்கும் மேற்பட்டோர் ஆளாகி உள்ளனர்.

இதுதொடர்பாக ஃபார்பிட்டன் என்ற ஊடக நிறுவனத்துடன் இணைந்து தி வயர், வாஷிங்டன் போஸ்ட், கார்டியன் உள்ளிட்ட 17 ஊடக நிறுவனங்கள் ஆய்வு நடத்தியதில் தெரியவந்துள்ளது.

கிட்டதிட்ட ஒன்றரை ஆண்டுக்கு பின், இவ்விவகாரம் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும், முன்னணி ஊடகவியலாளர்களும் சமூக ஊடகங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருவதால், இந்தியாவில் பெகாசஸ் செயலி விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

இவ்விவகாரம், நாடாளுமன்றத்திலும் எதிர்கட்சிகள் எழுப்பி உள்ளதால், இந்திய அரசியலில் பூதாகரமாகி உள்ளது. இந்த அறிக்கை அடிப்படை ஆதாரமற்றது என்று ஒன்றிய அரசு நிராகரித்துள்ளது.

இதுதொடர்பான அறிக்கையில், ‘இந்தியா உறுதியான ஜனநாயக நாடு. அனைத்து குடிமக்களின் தனிநபர் உரிமைகள் பாதுகாக்கப்படுவதில் ஒன்றிய அரசு உறுதியாக இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளது.

மேலும், பெகாஸஸ் செயலியை இந்தியாவுக்கு விற்பனை செய்த நிறுவனமும் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டதற்கான புகார்களை மறுத்துள்ளது.

மேலும், ‘தவறான புகார்களைத் தெரிவிப்போர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று பெகாஸிஸ் செயலியை சந்தைப்படுத்தும் இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனம் தெரிவித்துள்ளது.

.

மூலக்கதை