தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின்பு முதன் முறையாக டெல்லியில் ஜனாதிபதியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு: மரியாதை நிமித்தமாக பேசினார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின்பு முதன் முறையாக டெல்லியில் ஜனாதிபதியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு: மரியாதை நிமித்தமாக பேசினார்

சென்னை: தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின்பு முதன் முறையாக, டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை இன்று மரியாதை நிமித்தமாக முதல்வர் மு. க. ஸ்டாலின் சந்தித்து பேசினார். தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, கடந்த மாதம் 17ம் தேதி முதல்வர் மு. க. ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழகத்துக்கான பல முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.

அதில், தமிழகத்துக்கு அதிகளவு கொரோனா தடுப்பூசி, ஜிஎஸ்டி வரி விடுவிப்பு, எய்ம்ஸ் மருத்துவமனையை உடனே திறக்க வேண்டும், நீட் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கி இருந்தது. இதன் பின்னர், தமிழகத்துக்கு தடுப்பூசிகள் அனுப்பும் எண்ணிக்கை அதிகரித்தது.

பிரதமரும், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழகத்தின் பங்களிப்பை பாராட்டினார். ஆனால், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் சந்திக்கவில்லை.



இந்தநிலையில், தமிழக முதல்வராக மு. க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, முதல்முறையாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசுவதற்காக நேற்று மாலை 5 மணியளவில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். முதல்வருடன், தயாநிதி மாறன் எம். பி, கனிமொழி எம். பி உட்பட 8 பேர் உடன் சென்றனர்.

நேற்றிரவு 7. 45 மணிக்கு டெல்லி விமானநிலையம் வந்திறங்கிய முதல்வர் மு. க. ஸ்டாலினை நாடாளுமன்ற குழு தலைவர் டி. ஆர். பாலு, திருச்சி சிவா எம். பி. , தமிழக டெல்லி பிரதிநிதி ஏ. கே. விஜயன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்தும் சால்வை அணிவித்தும் வரவேற்றனர்.

 இதன் பின்னர் விமான நிலையத்தில் இருந்து சாணக்கியாபுரியில் இருக்கும் புதிய தமிழ்நாடு இல்லத்துக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் சென்றார். அங்கு அவருக்கு திமுக எம். பி. க்கள் கதிர் ஆனந்த், தமிழச்சி தங்கபாண்டியன், கவுதம சிகாமணி உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

நேற்றிரவு டெல்லியில் தங்கிய முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று பிற்பகல் 1 மணி அளவில் ஜனாதிபதி மாளிகைக்கு சென்றார். அங்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை, முதல்வர் மு. க. ஸ்டாலின், தான் பதவி ஏற்ற பின்பு முதன் முறையாக நேரில் சந்தித்து பேசினார்.

அப்போது அவர், தமிழக முதல்வராக சிறப்பாக செயல்படுவதாக பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார்.
இவர்களது சந்திப்பை தொடர்ந்து டெல்லி விமான நிலையம் வந்த முதல்வர் மு. க. ஸ்டாலின் அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

இவர்களது சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

மூலக்கதை