பல மாதங்களாக இழுபறி நீடித்த நிலையில் கோவிஷீல்டுக்கு 17 ஐரோப்பிய யூனியன் நாடுகள் அங்கீகாரம்: வெளிநாடு செல்லும் மாணவர், தொழில்துறையினர் நிம்மதி

தமிழ் முரசு  தமிழ் முரசு
பல மாதங்களாக இழுபறி நீடித்த நிலையில் கோவிஷீல்டுக்கு 17 ஐரோப்பிய யூனியன் நாடுகள் அங்கீகாரம்: வெளிநாடு செல்லும் மாணவர், தொழில்துறையினர் நிம்மதி

புனே: சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு 17 ஐரோப்பிய யூனியன் நாடுகள் அங்கீகாரம் அளித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு சென்று படிக்கும் மாணவர்கள், தொழில்துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர். இந்த தகவலை சீரம் நிறுவன தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் தடுப்பூசி உற்பத்தி நிறுவனமான சீரம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் கோவிஷீல்டு என்ற கொரோனா தடுப்பூசியை தயாரித்து இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் சப்ளை செய்து வருகிறது.

ஆனால், ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகள் அங்கீகாரம் கொடுக்காததால், அந்த நாடுகளுக்கு மாணவர்கள் உள்ளிட்டோர் இந்தியாவில் இருந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.

ஏற்கனவே, பைசர், மாடர்னா, வாக்ஸ்ஸர்வ்ரியா, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய நான்கு கொரோனா தடுப்பூசிகளை மட்டுமே ஐரோப்பிய யூனியன் அங்கீகரித்து இருந்தது.

அதனால், மேற்கண்ட நான்கு தடுப்பூசிகளை போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே ஐரோப்பிய யூனியனுக்கு பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி போட்டுக் கொண்ட இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் மற்றும் இதர பிரிவினர், ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு பயணிப்பதில் சிக்கல் நீடித்து வந்தது.

இதையடுத்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, சீரம் இந்தியா நிறுவன தலைமை செயல் அதிகாரி ஆதார் பூனாவாலா கடந்த சில வாரங்களுக்கு முன் அவசர கடிதம் எழுதினார்.

அதில், ‘இந்தியாவில் 30 கோடிக்கும் (ஜூன் கடைசி வார நிலவரம்) அதிகமானோருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி ஏற்கனவே போடப்பட்டுள்ளது.

தடுப்பூசி போடும் பணியின் இறுதியில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு, கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டு இருக்கும். ஐரோப்பிய யூனியனின் தடுப்பூசி பாஸ்போர்ட்டில் கோவிஷீல்டு இணைக்கப்படாதது, மாணவர்களுக்கும், வர்த்தகர்களுக்கும் பெரும் சிக்கலை ஏற்படுத்தும்.

இது உலக அளவில் பொருளாதார இழப்புகளுக்கு வழிவகுக்கும். எனவே இந்த பிரச்னைக்கு விரைவில் தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரியிருந்தார்.



இந்நிலையில், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) இன் உரிமையாளர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனாவல்லா வெளியிட்ட அறிக்கையில், ‘ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உட்பட்ட 27 உறுப்பு நாடுகளில் 16 நாடுகள் மற்றும் சுவிட்சர்லாந்து (ஐரோப்பிய ஒன்றியத்தின் பகுதி அல்ல) ஆகிய நாடுகள் அவசரகால பயன்பாட்டு பட்டியலின் அடிப்படையில், கோவிஷீல்டு தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே, கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டோரின் பயணத்திற்கு பிரான்ஸ் ஒப்புதல் அளித்தது.

அதேபோல், ஜெர்மனி, நெதர்லாந்து நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளன.

இன்றைய நிலையில், ஒவ்வொரு ஐரோப்பிய யூனியன் நாடுகளும் கோவிஷீல்டை ஏற்றுக்கொண்டு வருகின்றன.

இருந்தாலும், இத்தாலி உள்ளிட்ட நாடுகள் இன்னும் அங்கீகரிக்கவில்லை. கோவிஷீல்டு தடுப்பூசி மிகுந்த செயல்திறன் மிக்கது என்பதை ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் ஒப்புக் கொள்ள வேண்டும்.

ஏனெனில் எங்களது தடுப்பூசியை உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்துள்ளது. தற்போது அனுமதி அளித்துள்ள16 ஐரோப்பிய யூனியன் நாடுகளில் ஆஸ்திரியா, பிரான்ஸ், பெல்ஜியம், பல்கேரியா, பின்லாந்து, ஜெர்மனி, கிரீஸ், ஹங்கேரி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, லாட்வியா, மால்டா, நெதர்லாந்து, ஸ்லோவேனியா, ஸ்பெயின் ஆகிய நாடுகளும், சுவீடனும் அடங்கும்’ என்று தெரிவித்துள்ளார்.



கோவிஷீல்டுக்கான அனுமதி கிடைத்துள்ளதால், வெளிநாடு சென்று படிக்கும் மாணவர், தொழில்துறையினர் இனிமேல் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு எளிதில் செல்ல முடியும். இவர்கள் கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோசையும் போட்டிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


.

மூலக்கதை