மும்பையில் இன்று அதிகாலை சோகம்; நிலச்சரிவு, சுவர் இடிந்து விழுந்து 15 பேர் பலி: 24 மணி நேரத்தில் 204.5 மி.மீ மழை கொட்டியது

தமிழ் முரசு  தமிழ் முரசு
மும்பையில் இன்று அதிகாலை சோகம்; நிலச்சரிவு, சுவர் இடிந்து விழுந்து 15 பேர் பலி: 24 மணி நேரத்தில் 204.5 மி.மீ மழை கொட்டியது

மும்பை: மும்பையில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 15 பேர் இடிபாடுகளில் சிக்கி உயரிழந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் மும்பையில் 204. 5 மி. மீ மழை பெய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் கடந்த ஜூன் 9ம் தேதி மழைக்காலம் தொடங்கிய முதல் நாளே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக பெய்த மழையால் மும்பை நகரமே வெள்ளக்காடானது.

இந்நிலையில், செம்பூரின் பாரத் நகர் பகுதியில் இன்று அதிகாலை 1 மணியளவில் திடீரென மரத்தின் மீது வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த தேசிய பேரிடர் பதில் படை மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.   மேலும், பிரஹன் மும்பை மாநகராட்சியின் விக்ரோலியில் சூர்யா நகரில் அதிகாலை 2. 40 மணியளவில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக 5 குடிசைகள் இடிந்து விழுந்ததில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

காயமடைந்த இருவர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய தகவலின்படி  பல்வேறு சம்பவங்களில் 15 பேர் பலியாகி உள்ளனர்.

15க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) வெளியிட்ட அறிவிப்பில் மும்பைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.



இன்று காலை 6. 30 மணி வரையிலான நிலவரபடி மும்பை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் 12 மணி நேரத்திற்கு முன்னதாக 120 மி. மீ மழை பெய்தது.

கடந்த 24 மணி நேர கணக்கின்படி 204. 5 மி. மீ மழை பெய்ததாக ஐஎம்டி தெரிவித்துள்ளது.

.

மூலக்கதை