16 அணிகள் பங்கேற்கும் டி.20 உலக கோப்பை தொடர் அமீரகத்தில் அக். 17ல் தொடக்கம்: நவம்பர் 14ம் தேதி இறுதி போட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
16 அணிகள் பங்கேற்கும் டி.20 உலக கோப்பை தொடர் அமீரகத்தில் அக். 17ல் தொடக்கம்: நவம்பர் 14ம் தேதி இறுதி போட்டி

துபாய்: 7வது டி. 20 உலக கோப்பை தொடர் அக்டோபர், நவம்பரில் இந்தியாவில் நடத்தப்பட இருந்தது. ஆனால் கொரோனா தொற்று 2வது அலை வேகமாக பரவியதால் இந்தியாவில் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

கடந்த மாதம் 29ம்தேதி ஐசிசி கவுன்சில் கூட்டத்தில் இந்தியாவில் உலக கோப்பை டி. 20 தொடரை நடத்துவது குறித்து முடிவெடுக்க பிசிசிஐ சார்பில் ஒரு மாதம் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதன்படி ஜூன் 28ம்தேதி வரை ஐசிசி தரப்பில் அவகாசம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்தியாவில் தற்போது கொரோனாவின் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்திற்கும் மேல் உள்ளது. கொரோனாவின் 3வது அலை அக்டோபர், நவம்பரில் வரக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

மேலும் அக்டோபர், நவம்பரில் மழைக்காலம் என்பதால் உலக கோப்பை டி. 20 தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு தொடர் நடந்தாலும் அதனை நடத்தும் உரிமை பிசிசிஐ வசமே இருக்கும்.

அக்டோபர் 17ம் தேதி உலக கோப்பை டி. 20 தொடர் தொடங்க உள்ளது.

16 அணிகள் பங்கேற்கின்றன. இறுதிபோட்டி நவம்பர் 14ம்தேதி நடைபெற உள்ளது.

தகுதி சுற்றில் வங்கதேசம், இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நமீபியா, ஓபன், பப்புவா நியூ கினியா ஆகிய 8 அணிகள் விளையாடும். இதில் இருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதிபெறும்.

இதில் தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு நேரடியாக தகுதி பெறும். சூப்பர் 12 சுற்றில் 30 போட்டிகள் உள்ளன.

இந்த சுற்று அக்டோபர் 24ம் தேதி தொடங்க உள்ளது. 6 அணிகள் 2 குழுவாக பிரிக்கப்பட்டு தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும்.இந்த போட்டிகள் துபாய், அபுதாபி, சார்ஜாவில் நடைபெற உள்ளன. சூப்பர் 12 சுற்றில், ஏ மற்றும் பி குழுவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குள் நுழையும்.

தகுதி சுற்றில் சில போட்டிகள் ஓமனில் நடைபெற உள்ளது. போட்டிகள் குறித்த அதிகாரப்பூர்வ அட்டவணை விரைவில் வெளியிடப்பட உள்ளது.

முன்னதாக ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளை செப்டம்பர் 19ம் தேதி முதல் அக்டோபர் 15ம் தேதி வரை அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

இந்த தொடர் முடிந்த 2 நாட்களில் உலக கோப்பை டி. 20 தொடர் தொடங்க உள்ளது.

.

மூலக்கதை